விளையாட்டு
185க்கு ஆல் அவுட்! சிட்னி டெஸ்ட்டில் சட்னியான இந்திய அணி
185க்கு ஆல் அவுட்! சிட்னி டெஸ்ட்டில் சட்னியான இந்திய அணி
INDvsAUS : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியிலும் தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசிப் போட்டி , சிட்னி மைதானத்தில் இன்று (ஜனவரி 3) அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால்(10) மற்றும் கே.எல்.ராகுல்(4) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடந்து களமிறங்கிய சுப்மன் கில் 20 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி அதிகபட்சமாக 48 ரன்கள் குவித்த நிலையில் அதனை போலண்ட் பிரித்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 40 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து கடந்த போட்டியில் தனது முதல் சர்வதேச சதம் கண்ட நிதிஷ் குமார் ரெட்டி டக் அவுட் ஆனார்.
இறுதியில் கேப்டன் பும்ரா மட்டுமே 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 22 ரன்கள் குவித்து சிறிது அதிரடியாக ஆடிய நிலையில், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக போலண்ட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் குவித்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடக்க வீரர் கவஜாவின் (2) விக்கெட்டை பும்ரா கைப்பற்றிய நிலையில், இந்திய அணி 176 ரன்கள் முன்னிலையில் உள்ளது.