இந்தியா
ஞானசேகரன் வீட்டில் எஸ்.ஐ.டி ரெய்டு… முக்கிய ஆவணங்கள் சிக்கியது!
ஞானசேகரன் வீட்டில் எஸ்.ஐ.டி ரெய்டு… முக்கிய ஆவணங்கள் சிக்கியது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று (ஜனவரி 4) விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை பெருநகர காவல்துறை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவானது பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அங்குள்ள பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், சென்னை கோட்டூரில் உள்ள ஞானசேகரன் வீட்டிற்கு சென்ற சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், மாணவி வன்கொடுமை செய்யப்பட்டபோது ஞானசேகரன் அணிந்திருந்த தொப்பி, அவரது லேப்டாப், பென் டிரைவ், பேனா கேமரா, பட்டாக்கத்தி, ஆவணங்கள் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றிருப்பதாக தெரிகிறது.