இந்தியா

டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு நட்டா தந்த நம்பிக்கை… அண்ணாமலை – சந்தோஷ் கெமிஸ்ட்ரி… தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?

Published

on

டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு நட்டா தந்த நம்பிக்கை… அண்ணாமலை – சந்தோஷ் கெமிஸ்ட்ரி… தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?

வைஃபை ஆன் செய்தவுடன் தமிழக பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளார் பி.எல். சந்தோஷ் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா லைவ் லிங்க் இன்பாக்சில் வந்து விழுந்தது.

”ஜனவரி 4 ஆம் தேதி தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி. சூர்யா எழுதிய, ‘வீரசாவர்க்கர் -ஒரு கலக்காரனின் கதை’ என்ற புத்தகத்தை சென்னையில் பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ்  வெளியிட்டார். இந்த விழா ஒரு புத்தக வெளியீட்டு விழாவாகவும் இல்லாமல் அதைத் தாண்டிய முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக தமிழக பாஜகவுக்குள் விவாதிக்கப்படுகிறது.

Advertisement

இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சந்தோஷ் சென்னை வருகிறார் என்றாலே தமிழக பாஜகவில் முக்கியத்துவமாகவே கருதப்படும்., அவர் புத்தக வெளியீட்டு விழாவுக்காக சென்னை வருகிறார் என்றாலும், தமிழக பாஜகவை பற்றி அவர் சில முக்கிய ஆலோசனைகளையும் நடத்துவார் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக ஆக்கியதற்கு முக்கியமான காரணம் சந்தோஷ் என்பது பாஜகவில் பலரும் அறிந்ததே. அந்த வகையில்,  தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்படக் கூடும் என்ற பேச்சுகள் ஒலிக்கும் நிலையில் சந்தோஷ் சென்னை வந்திருக்கிறார்.

இதே அளவுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி தமிழிசையின் டெல்லி பயணமும் முக்கியத்துவமாக பேசப்பட்டது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த தமிழிசை, தமிழ்நாடு அரசியல் பற்றியும் தமிழக பாஜக பற்றியும் பேசியிருக்கிறார்.

Advertisement

‘தமிழகத்தில் திமுக அரசு  மீது வெறுப்பும் கோபமும் மக்களிடம் இருக்கிறது. அதை 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும். வலிமையான கூட்டணி அமைக்காததால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நம்மால் ஒரு இடம் கூட தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாமல் போனது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மனதில் பட்டதை இடம்பொருள்  பார்க்காமல் உடைத்துப் பேசிவிடுகிறார். அரசியலுக்கு இது சரிப்பட்டு வராது.  அவருடைய அணுகுமுறையால்தான் 2023 ஆம் ஆண்டே பாஜகவுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது.

எனவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வலிமையான கூட்டணி அமைக்க வேண்டுமானால்… அந்த கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு இணக்கமான சூழலை உருவாக்கும் தன்மை கொண்டவர் மாநிலத் தலைவராக இருக்க வேண்டும்.  அது நானாகத்தான் இருக்க வேண்டும் என்றல்ல.  வேறு யாராக இருந்தாலும் நன்றாக இருக்கும்.  எனக்கு கொடுத்தீர்கள் என்றாலும் ஏற்கத் தயார்’ என்று கூறியுள்ளார். நட்டாவும் தமிழிசையின் கட்சிப் பணிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டி நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறினார் என்கிறார்கள் தமிழிசை தரப்பில்.

Advertisement

தமிழிசை தனக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்காவிட்டாலும், அண்ணாமலை அந்த பதவியில் தொடரக் கூடாது என்ற வியூகத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறார். நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கிறார்கள் என்கிறார்கள் பாஜகவினர்.

அதேநேரம் இன்று சென்னை வந்திருக்கும் பி.எல். சந்தோஷ் அண்ணாமலையுடன் இது தொடர்பாக விவாதித்திருக்கிறார். அண்ணாமலைக்கும் சந்தோஷுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி இன்னும்  தொடர்கிறது என்றும், அதனால் அண்ணாமலை நம்பிக்கையாகவே இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு  செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version