நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 06/01/2025 | Edited on 06/01/2025
இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராக பயணித்து வந்த கங்கை அமரன், சமீப காலமாக அதிகம் திரைத்துறையில் கவனம் செலுத்துவதில்லை. இருப்பினும் சில படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்துகொண்டிருந்தார். கடைசியாக இவரது மகன் இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் ‘ஸ்பார்க்’ பாடலை எழுதியிருந்தார். பின்பு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில் ’காத்திருந்தேன்’ பாடலை எழுதியிருந்தார். திரைத்துறையைத் தாண்டி அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பா.ஜ.க.வில் பயணிக்கிறார். இக்கட்சி சார்பில் 2017ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
இதனிடையே திரைப்படங்களில் அவ்வப்போது கேமியோ ரோலில் சில படங்களில் நடித்து வந்த கங்கை அமரன் தற்போது இன்னும் பெயரிடாத ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய பகுதிகளை சுற்றி நடைபெற்று வருவதால், அதில் பங்கேற்க மானாமதுரை சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டார்.