பொழுதுபோக்கு
ஆஸ்கார் ரேஸில் இணைந்த கங்குவா; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா?
ஆஸ்கார் ரேஸில் இணைந்த கங்குவா; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம், நவம்பர் மாதம் வெளியாகி தோல்வியை தழுவினாலும், இந்த படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இணைந்துள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது பல படங்களை கைவசம் வைத்திருந்தாலும், கடைசியாக அவர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் கங்குவா படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானி ஜோடியாக நடித்துள்ளார்.அதேபோல் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் நட்டி நடராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கோவைசரளா, ரெட்டின் கிங்ஸ்லீ, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் கங்குவா.பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், வசூலில் பெரிய தோல்வியை சந்தித்து 2024-ம் ஆண்டு சூர்யாவுக்பு பெரிய சறுக்கலை கொடுத்தது. வசூலில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத கங்குவா, தற்போது சினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது தகுதிப்பட்டியலில், இடம் படித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கதை மற்றும் திரைக்கதையில் கங்குவா விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மேக்கிங்கில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.97-வது ஆஸ்கார் விருதுக்காக உலகம் முழுவதும் 323 படங்கள் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 207 படங்கள் தகுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது, இதில் கங்குவா திரைப்படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. மேலும், மலையாளத்தில் வெளியான தி கோட் லைஃப் (ஆடு ஜீவிதம்) இந்தியில் வெளியான, வி ஆல் இமேஜன் அஸ் லைட், பேண்ட் ஆப் மகாராஜாஸ், தி ஜீப்ராஸ் ஆகிய படங்களும் ஆஸ்கார் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படங்கள் வரிசையில் விருது பெற வேண்டுமானால் வாக்கு எண்ணிக்கை மிகவும் முக்கியமானது. அதிக வாக்குகள் பெரும் படத்திற்கே, விருது வழங்கப்படும் நிலையில், இதற்கான வாக்குப்பதிவு வரும் ஜனவரி 8-ந் தேதி முதல், 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தபிறகு எந்தெந்த படங்கள் போட்டிக்கு தேர்வாகியுள்ளது என்பது குறித்த அறிவிப்பு ஜனவரி 17-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“