இலங்கை
இந்தியாவுக்கு பாலம் அமைக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை!
இந்தியாவுக்கு பாலம் அமைக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை!
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாகப் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் நேற்றுத் தெரிவித்ததாவது:
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டம் இன்று தோன்றியுள்ள திட்டம் அல்ல. இது ஆதிகாலம் முதற்கொண்டு இருந்துவரும் பேச்சு. பாரதியார் சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம் என்று அன்றே கூறியுள்ளார்.
சிங்கள மக்களுடன் உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாரதி அவ்வாறு சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால், இது அவசியமான திட்டமாகும். இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டுமெனில் பல்வேறு சேவைகளை வழங்க வேண்டும். தற்போது படகு சேவை இடம்பெற்றாலும் பெருமளவானவர்கள் வருவதில்லை. எனவே, பாலம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு இணைப்பை ஏற்படுத்தினால் வாகனங்களில் சென்றுவரக்கூடிய சூழல் உருவாகும். இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து பொருளாதாரம் மேம்படும். நாடும் அபிவிருத்தி அடையும். எனவே, பாலம் அமைக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.’ – என்றார். (ப)