விளையாட்டு

கேல் ரத்னா விருது வழங்குவதில் பாரபட்சம்: விளையாட்டு அமைச்சகம் மீது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Published

on

கேல் ரத்னா விருது வழங்குவதில் பாரபட்சம்: விளையாட்டு அமைச்சகம் மீது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு குற்றச்சாட்டு

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது நான்கு  பேருக்கு அறிவிக்கப்பட்டது. செஸ் உலக சாம்பியன் குகேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. மேலும்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகி கவுரவிக்கிறார்.  இந்நிலையில், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது  வழங்குவதில்  மத்திய விளையாட்டு அமைச்சகம் பாரபட்சம் காட்டுவதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் விருதுகள் பெறும் வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல் வெளியாகும் முன்பு கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை, அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இது சமூக வலைதள பக்கங்களில் பெரும் பொருளாக மாறியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருக்கு விருது இல்லையா என பல்வேறு தரப்பினரும்  கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, விருது பெறுபவர்கள் பட்டியலில் மனு பாக்கர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நியமன செயல்முறையை விமர்சித்துள்ள இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் சஞ்சய் சிங், ஆரம்பத்தில் மனு பாக்கரை விருது பெறுவதில் இருந்து புறக்கணித்தது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “பாரத ரத்னா அல்லது கேல் ரத்னா யாருக்கு வழங்குவது என்று அதிகாரிகள் விவாதிக்கிறார்கள். இரண்டு பதக்கங்களை வென்ற பிறகும் மனு பாக்கரின் பெயர் இல்லை என்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபற்றிய விவாதம் தொடங்கப்பட்ட பிறகு அவர் சேர்க்கப்பட்டார்.  கேல் ரத்னா பட்டியலில், அதிகாரிகள் அமர்ந்து தங்களுக்குப் பிடித்தவர்களை சேர்க்க முயற்சிக்கிறார்கள்.” என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மனு பாக்கரின் சாதனைகளில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை நிகழ்வுகளில் 21 பதக்கங்களின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை ஆகியவை அடங்கும். பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார், 10 மீட்டர் பிஸ்டல் மற்றும் கலப்பு குழு போட்டி இரண்டிலும் வெண்கலம் வென்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version