இலங்கை
சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது – மஹிந்த ஜயசிங்க
சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது – மஹிந்த ஜயசிங்க
இடம்பெறும் சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது. இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அத்துடன் தூய இலங்கை வேலைத்திட்டம் பெப்ரவரியிலே ஆரம்பிக்கும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒருசில ஊடகங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்த நல்ல விடயத்தையும் பிரசுரிப்பதில்லை. எமது குறைபாடுகளை மாத்திரமே ஒளிபரப்பி வருகின்றன. அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் ஒருபோதும் ஊடகங்களை அடக்குவதற்கு முற்படப்போவதில்லை.
நாங்கள் எப்போதும் ஊடகங்களுடன் சிநேகபூர்வமாக செயற்பட்டவர்கள், செயற்படுபவர்கள். இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு இடமளிக்கக்கூடாது. இடமளிக்கவும் மாட்டோம்.
அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை மதிப்பிடக் கூடாது. முச்சக்கரவண்டி, பஸ் வண்டிகளில் மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுதல் அல்லது அரிசி பிரச்சினயை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை மதிப்பிட வேண்டாம்.
மேலும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் நாங்கள் தூய இலங்கை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். இந்த மாதம் முழுவதும் இந்த வேலைத்திட்டத்தை அறிவுறுத்தும் நடவடிக்கையே இடம்பெறுகிறது. ஆனால் இலங்கை பொலிஸ், தூய இலங்கை வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளதாக சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் நாங்கள் இதனை பெப்ரவரியிலேயே ஆரம்பிக்கிறோம். தற்போது அறிவுறுத்தும் நடவடிக்கையே இடம்பெறுகிறது.
ஆனால், பொலிஸார் சுற்று நிருபம் வெளியிட்டு முச்சக்கரவண்டி, பஸ்வண்டிகளின் மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றும்போது, தூய இலங்கை என்பது இதுதானா என மக்கள் எண்ண தொடங்கியுள்ளனர். எனவே தூய இலங்கை என்பது இதுவல்ல. அது பாரிய வேலைத்திட்டம். அது படிப்படியாக முன்னெடுக்கப்படும்போது மக்கள் எங்களை விளங்கிக்கொள்வார்கள் – என்றார்.