வணிகம்
ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைக்க, எளிமைப்படுத்த திட்டம்; மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை
ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைக்க, எளிமைப்படுத்த திட்டம்; மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை
Aggam Walia , Soumyarendra Barikபட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையை எளிமைப்படுத்தவும், குறைக்கவும் பணிகள் நடந்து வருகின்றன. ஜி.எஸ்.டி விகிதத்தை குறைப்பது மட்டுமின்றி, கட்டமைப்பை எளிமையாக்குவது குறித்தும், 12 சதவீத அடுக்கை நீக்குவதில் குறிப்பாக கவனம் செலுத்துவது குறித்தும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவாதங்கள் நடந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு தெரிய வந்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க: GST rate rationalisation, simplification in the works; discussion between Centre, states underwayவிகித குறைப்பைக் கண்காணிக்க ஜி.எஸ்.டி.,யின் கீழ் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஒவ்வொரு முக்கிய அடுக்குகளிலும் உள்ள விகிதங்கள் – பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் – மற்றும் பொருட்களை அதிக அல்லது குறைவான அடுக்கிற்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து தர்க்கரீதியான விவாதங்களை நடத்தியதாக அறியப்படுகிறது. ஆனால், விரிவான ஆலோசனைக்குப் பிறகும், 12 சதவீத ஜி.எஸ்.டி அடுக்கு மற்ற மூன்று முக்கிய அடுக்குகளுடன் சேர்த்து குழுவால் தக்கவைக்க முன்மொழியப்பட்டது. இது அடுக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் முரண்பட்டதாக உள் விவாதங்களில் சுட்டிக்காட்டப்பட்டது, என வட்டாரங்கள் தெரிவித்தன.“ஜி.எஸ்.டி விகிதத்தை குறைப்பது குறித்த அமைச்சர்கள் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு அடுக்குகளில் உள்ள அனைத்து பொருட்களையும் விரிவாக விவாதித்தனர், அதைத் தொடர்ந்து அவர்கள் சில பொருட்களை மற்ற விகித அடுக்குகளுக்கு, குறிப்பாக 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் அல்லது 5 சதவீத அடுக்குகளுக்கு மாற்ற பரிந்துரைத்தனர். இருப்பினும், குழு இன்னும் சில பொருட்களுடன் 12 சதவீத அடுக்கை தக்க வைத்துக் கொள்ள முயன்றது, இது விகிதத்தை குறைப்பது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி வரி முறையை எளிமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஆலோசனைக்கு எதிரானது,” என்று ஒரு ஆதாரம் தெரிவித்துள்ளது.குழு இப்போது விஷயத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது, மேலும் கூடுதல் ஆலோசனைகளை நடத்தும் என்றும் அந்த வட்டாரம் கூறியது.முன்னதாக ஜி.எஸ்.டி விகிதத்தை குறைப்பது தொடர்பான உள் விவாதங்களில், 12 சதவீதம் மற்றும் 18 சதவீத அடுக்குகளை ஒன்றிணைத்து புதிய 15 சதவீத அடுக்கை உருவாக்குவது, இதன்மூலம் மூன்று அடுக்கு கட்டமைப்பை மட்டும் கொண்டிருப்பது ஆகிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இரண்டு அடுக்குகளையும் இணைப்பது பரந்த ஒருமித்த கருத்தைப் பெறவில்லை, ஏனெனில் பொருட்களை 18 சதவீத அடுக்கில் இருந்து 15 சதவீதத்திற்கு மாற்றுவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 12 சதவீத அடுக்கில் உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி விகிதத்தை 15 சதவீதம் வரை உயர்த்துவதால் ஏற்படும் லாபத்தை விட அதிகமாக இருக்கும். மருந்துகளுடன் இணைக்கப்பட்ட சில பொருட்களுக்கு 12 சதவீதத்திற்கும் அதிகமான விகிதமும் ஒரு கவலையாக சுட்டிக்காட்டப்பட்டது, ஏனெனில் 15 சதவீத புதிய விகிதம் கொண்டு வரப்பட்டால் அவற்றின் விலை அதிகமாகும்.ஜி.எஸ்.டி வருவாயில் 70-75 சதவீதம் 18 சதவீத அடுக்கில் உள்ள பொருட்களிலிருந்து வருகிறது, அதே நேரத்தில் 12 சதவீத விகிதம் வெறும் 5-6 சதவீதமாக இருப்பதால், 18 சதவீத அடுக்கில் உள்ள பொருட்களைக் குறைப்பது எளிதானது அல்ல.தற்போது, ஜிஎஸ்டி பல அடுக்கு கட்டமைப்பைக் கொண்டுள்ளது – பூஜ்யம், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் – ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகபட்ச விகிதமான 28 சதவீதத்திற்கு மேல் இழப்பீடு செஸ் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.கடந்த மாதம் ஜெய்சால்மரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 55வது கூட்டத்தில் பல பொருட்களின் விலையை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருப்பினும், உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கான வரி விகிதத்தை குறைக்கும் முக்கிய முடிவை ஒத்திவைக்க முடிவு செய்தது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் 148 பொருட்களுக்கான கட்டணங்களை மாற்றியமைக்கும் திட்டத்தை விவாதிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.