பொழுதுபோக்கு
குரங்குகள் மீது அம்பு விடும் க்யூபிட்… வெளியானது யூடியூபர்களான கோபி, சுதாகர் படத்தின் டைட்டில் டீசர்!
குரங்குகள் மீது அம்பு விடும் க்யூபிட்… வெளியானது யூடியூபர்களான கோபி, சுதாகர் படத்தின் டைட்டில் டீசர்!
இணையத்தை கலக்கும் யூடியூபர்களான கோபி, சுதாகர் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் டீசர் இன்று (பிப் 11) வெளியாகியுள்ளது.சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் கோபி மற்றும் சுதாகர் குறித்து தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு யூடியூப் உலகில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை இவர்கள் கொண்டுள்ளனர்.முன்னதாக, டெலிவிஷன் சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்கள், யூடியூபின் மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தனர். குறிப்பாக, ‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் பார்வையாளர்களைக் கடக்கும். பள்ளி, கல்லூரி, அலுவலகம், மற்றும் தேநீர்க் கடை போன்ற இடங்களில் நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை காமெடியாக சித்தரித்து இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் வகையில் அமையும். இது மட்டுமின்றி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இவர்களது காமெடிக்கள் மீம் கன்டென்ட்களாக வலம் வருகிறது.இதன் தொடர்ச்சியாக, ‘பரிதாபங்கள்’ எனத் தனியாக யூடியூப் சேனல் இன்றை உருவாக்கிய இவர்கள் பல ஆண்டுகளாக வீடியோ வெளியிடுகின்றனர். இது மட்டுமின்றி அரசியல் விமர்சனங்களையும் தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் இவர்கள் பதிவிட்டனர். ஆனால், அண்மையில் இவர்கள் வெளியிட்ட லட்டு பாவங்கள் என்ற வீடியோ சர்ச்சையை கிளப்பும் வகையில் இருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அந்த வீடியோவை நீக்கினர்.இதனிடையே, கோபி, சுதாகர் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு க்ரவுட் ஃபண்டிங் மூலமாகவும் நிதி திரட்டப்பட்டது. இந்நிலையில், இவர்கள் நடிக்கும் படத்திற்கான டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணு விஜயன் இயக்கும் இப்படத்திற்கு ‘Oh God Beautiful’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.அனிமேஷன் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டைட்டில் டீசர் வீடியோவில், மூன்று குரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த குரங்குகள் மீது க்யூபிட் அம்பு எய்துவது போல வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோபி மற்றும் சுதாகரின் ரசிகர்களிடையே இந்த டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.