நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 26/02/2025 | Edited on 26/02/2025

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’,  ‘பகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி, அடுத்தாக மீண்டும் ரிச்சர்ட் ரிசியை வைத்து படம் இயக்கவுள்ளதாக முன்பு தெரிவித்திருந்தார். ரிச்சர்ட் ரிசி திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மோகன் ஜி – ரிச்சர்ட் ரிசி இணையும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சோழா சக்கரவர்த்தி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படம் திரௌபதி படத்தின் இரண்டாம் பாகமாக ‘திரௌபதி 2’ என்ற தலைப்பில் உருவாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Advertisement

போஸ்டரில் ஒரு புறம் கோவிலும் மற்றொரு புறம் கோட்டையும் இடம் பெற்றுள்ளது. மேலும் இரண்டு தரப்பு மக்கள் போராட்ட களத்தில் இருப்பது போல் காட்சி இடம் பெற்றிருக்கும் நிலையில் இரண்டு கழுகும் இடம் பெற்றுள்ளது. அதோடு ‘14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்களின் செந்நீர் சரிதம்’ என்ற வாசம் எழுதப்பட்டுள்ளது. இப்படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் ஜி, “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, தர்மம் காக்க உயிரை துச்சமென துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம்.. இந்த ஆண்டு இறுதியில், திரையில் மீண்டும் மிரட்ட வருகிறாள் திரெளபதி 2” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இப்படத்தின் முதல் பாகமான திரௌபதி, 2020ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. சமூகத்தில் நாடகக் காதல் நடந்து வருவதாக மோகன் ஜி கூறிய கருத்துக்கு ஒரு தரப்பினர் எதிராகவும் மற்றொரு தரப்பினர் ஆதரவாகவும் கருத்து கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


<!–
–>

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

–>

Advertisement