இலங்கை
ஐ.நா.வின் பரிந்துரைகளின் படி செயற்பட வேண்டும் இலங்கை!
ஐ.நா.வின் பரிந்துரைகளின் படி செயற்பட வேண்டும் இலங்கை!
இணையனுசரணை நாடுகள் இறுக்கம் -அநுர அரசின் முயற்சிக்கும் வரவேற்பு
இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்தகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையிலும் அமைய வேண்டும் என்று இணையனுசரணை நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல்’ தொடர்பான பரிந்துரைகளுக்கு பிரிட்டன், வட அயர்லாந்து, கனடா, மலாவி, மொன்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணையனுசரணை வழங்கியிருந்தன.
அந்த நாடுகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் உள்ளதாவது:
இலங்கையில் கடந்த வருடம் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்றதையும் அமைதியான ஆட்சி மாற்றத்தையும் நாங்கள் வரவேற்கின்றோம். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பையேற்று நான்கு மாதங்களே ஆகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கை இந்த மாற்றத்தை பயன்படுத்தி, தான் எதிர்கொண்டுள்ள சவால்களுக்குத் தீர்வைக் காண்பதற்கு முயலவேண்டும் என நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.
நல்லிணக்க விடயங்களில் அர்த்தபூர்வமான முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், நிலங்களை மீளக் கையளிப்பது, வீதித்தடைகளை அகற்றுவது, வடக்கு – கிழக்கில் உள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர அனுமதிப்பது ஆகிய நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கின்றோம். அத்துடன், இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படையில் அதிகாரங்களை பகிர்வதற்கான ஆட்சி முறை சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றீடு செய்வது குறித்த தனது நோக்கத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். புதிய சட்டம் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற விதத்தில் காணப்படவேண்டும் என நாங்கள் மீள வலியுறுத்துகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யவேண்டு;ம் என நாங்கள் அறிவுறுத்துகின்றோம்.
ஊழல் ஒழிப்பு மற்றும் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றத்தை காண்பதற்கு அரசாங்கம் முயல வேண்டும். இந்தத் தருணத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளும், பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்றதாக அமைய வேண்டும். அத்தோடு, அவை கடந்தகால பரிந்துரைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாகக் காணப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் – என்றுள்ளது.