இலங்கை

சங்குக் கூட்டணியோ இணையத் தயாரில்லை

Published

on

சங்குக் கூட்டணியோ இணையத் தயாரில்லை

தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பதில்

தமிழ்க் கட்சிகள் பல சேர்ந்து அமைத்துள்ள புதிய கூட்டணியில் இணைவதற்குத் தயாரில்லை என்று தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட கட்சிகளை மீண்டும் இணைந்து செயற்பட வருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பில் அவரால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பிய சித்தார்த்தன், ‘தமிழரசுக் கட்சியினர் விரும்பினால், தமிழ்க் கட்சிகள் பல சேர்ந்து அமைத்துள்ள புதிய கூட்டணியில் இணையலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்தே, தமிழ்க் கட்சிகளின் புதிய கூட்டில் தமிழரசுக் கட்சி இணையாது என்று நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழரசுக் கட்சியோடு ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய மூன்று கட்சிகளுமாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட்டு வந்திருந்தோம். ஆனால் கடந்த உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் தனித்தனியாக போட்டியிட்டு கூட்டாக செயற்படுவதென தமிழரசுக் கட்சி தீர்மானித்தது.

Advertisement

ஆனால் அதனைத் தவறாகச் சித்தரித்து ‘தமிழரசு தனிவழி’ என்றவாறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன. நாங்கள் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமென நினைக்கவில்லை. இப்போதுகூட முன்னரைப் போல மீளவும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து இயங்குதவற்கான அழைப்பையே விடுத்திருக்கிறோம்.

அந்த முயற்சியின் தொடராக கூட்டமைப்பில் இருந்த கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். கட்சிகளின் தலைவர்களை நான் சந்தித்தபோது சாதகமாக பரிசீலிப்பதாக சொன்னவர்கள் மறுநாளே தாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர். இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கிறது என்றால் அதனை நேரடியாகவே எங்களிடத்தே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்றுவித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அவர்களின் புதிய கூட்டணியை எதிர்க்கவில்லை. அது அவர்களது உரிமை. ஆனால் அவர்களின் செயற்பாடே எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம் ஒரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும் எங்களது கட்சியின் மத்திய குழுவோடு பேசிவிட்டு வருமாறும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது.
ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம் வாருங்கள் என்றே இணக்கத்தின் அடிப்படையில் அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து உங்களது கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாகச் சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் அப்பாவித் தனமாக நாங்கள் இருந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் இப்போதும் கூறுகிறோம் கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் மீளவும் கூட்டமைப்புக்கு வருவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன – என்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version