இலங்கை
வடமாகாண மீனவர்களின் நம்பிக்கையைக் காப்போம்
வடமாகாண மீனவர்களின் நம்பிக்கையைக் காப்போம்
அமைச்சர் சந்திரசேகர் வாக்குறுதி
வடமாகாண மீனவர்கள் எமது அரசாங்கம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குக் கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம். கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடற்றொழிலை கட்டியெழுப்புவதற்குரிய புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையைச் சூழ கடல் இருந்தும், இந்தத் தொழில்துறையை முன்னேற்றுவதற்குக் கடந்த காலங்களில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடன் பொறிக்குள் சிக்கிய நிலையே காணப்பட்டது. எனவே, இந்நிலையிலிருந்து எமது அமைச்சை கட்டியெழுப்புவதற்குரிய தேவைப்பாடு எமக்கு உள்ளது. அதனைச் செய்வோம்.
வடக்கிலுள்ள கடற்றொழிலாளர்கள் எமக்கு பெருவாரியான ஆதரவை வழங்கினர். அந்த மீனவ மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் இருந்து வழங்குகின்றேன்.
மீனவர்களின் வாழ்க்கையுடன் ஏனையவர்கள்போல் விளையாடும் விளையாட்டு பிள்ளைகள் அல்லர் நாம். நாம் மீனவர்களுடன் வாழ்பவர்கள். அவர்களின் வலி, வேதனை எமக்கு புரியும். வடக்கில் மீன்பிடித்தொழிலை கட்டியெழுப்புவதற்குரிய வேலைத்திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’ – என்றார்.