நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 11/03/2025 | Edited on 11/03/2025
ஜோதிகா ‘டப்பா கார்ட்டல்’ என்ற வெப் சீரிஸில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்த சீரிஸ் கடந்த மாதம் 28ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரிஸ் தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய ஜோதிகா, சூர்யா நடித்த கங்குவா பட விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “தென்னிந்தியாவில் கமர்சியல் ரீதியாக மோசமான ஏராளமான படங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அந்த படங்கள் கண்ணியமுடன் விமர்சிக்கப்பட்டது. ஆனால் என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் படத்தில் ஒட்டுமொத்தமாக ஏகப்பட்ட உழைப்புகள் கொட்டப்பட்டுள்ளது. மற்ற மோசமான படங்களை விட கங்குவா படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததுதான் என்னை ரியாக்ட் செய்ய வைத்தது. அதை விட மீடியா இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாதது என்னை அதிகம் அப்செட் ஆக்கியது” என்றுள்ளார்.
சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் உருவான கங்குவா படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக படமுழுக்க அனைத்து கதாபாத்திரங்களும் கத்திக் கொண்டே இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து ஜோதிகா, “திட்டமிட்டு வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதுவும் பெரிய சர்ச்சையாக மாற அவரும் ட்ரோல்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.