இந்தியா

உலகின் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 5ஆவது இடம்!

Published

on

உலகின் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 5ஆவது இடம்!

உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடம் பிடித்துள்ளது.

சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், பங்களாதேஷ், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.

Advertisement

உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அசாமில் உள்ள பைர்னிஹாட், டில்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், ஃபரிதாபாத், லோனி, புது டில்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அசாமின் பைர்னிஹாட் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடில்லி முதலிடத்தில் உள்ளது.

அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்குச் சென்றுள்ளது.

அமெரிக்காவின் மிகவும் மாசுபட்ட நகராக கலிஃபோர்னியா அடையாளம் காணப்பட்டுள்ளது. பிற மாசுபட்ட நகரங்களாக லாஸ் ஏஞ்சல்ஸ், ஆன்டாரியோ ஆகியவை உள்ளன. சியாட்டில், வாஷிங்டன் ஆகியவை தூய்மையான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உலகின் மிகவும் தூய்மையான பகுதியாக பியூர்டோ ரிகோவின் மயாகீஸ் இடம் பிடித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் காற்று மாசுபாடு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்தியர்களின் ஆயுள் காலம் 5.2 ஆண்டுகள் குறைகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும் சுகாதார அமைச்சக ஆலோசகருமான சவுமியா சுவாமிநாதன், காற்றின் தர தரவு சேகரிப்பில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் எனினும், நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களிடம் தரவுகள் உள்ளன. இப்போது நமக்குத் தேவை நடவடிக்கைதான்.

உயிரி எரிவாயுவை LPG உடன் மாற்றுவது போன்ற சில தீர்வுகள் எளிதானவை. இந்தியா ஏற்கெனவே இதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளது. ஆனால், கூடுதல் சிலிண்டர்களை மானியமாக வழங்க வேண்டும். தற்போது முதல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், ஏழைக் குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் அதிக மானியங்களைப் பெறுவது மிகவும் முக்கியம். இது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதோடு, வெளிப்புற காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

பொது போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கும், நகரங்களில் சில கார்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் அரசு முன்வர வேண்டும் என்று சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். “மாசு வெளியேற்றச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவது மிகவும் முக்கியம். தொழில்கள் மற்றும் கட்டுமான தளங்கள் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். குறுக்குவழிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக உமிழ்வைக் குறைக்க உபகரணங்களை நிறுவ வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version