உலகம்
முதியோருக்கான சலுகைகளை அதிகரிக்க சீனா நடவடிக்கை!
முதியோருக்கான சலுகைகளை அதிகரிக்க சீனா நடவடிக்கை!
நாட்டில் முதியோர் சனத்தொகை அதிகரித்துவரும் நிலையில் கிராமப்புறங்களிலும் இடை நகரங்களிலும் குடியிருக்கும் முதியோர்களுக்கான சலுகைகளை அதிகரிப்பதற்கு சீனா நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதேநேரம், ஒய்வு பெற்றவர்களுக்கான அடிப்படை ஒய்வூதிய சலுகைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள சீனா, நாட்டின் சனத்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், சிறுவர் பராமரிப்புக்கு மானியங்கள் வழங்கவும் முன்பள்ளி கல்வியை இலவசமாக வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேநேரம், சனத்தொகையில் கடந்த வருடமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. திருமணங்களிலும் ஐந்திலொரு பங்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இளம் தம்பதிகள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கவும் முதியோருக்கான நலன்புரி சேவைகளை மேலும் மேம்படுத்தவும் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது நலன் சார்ந்த முதியோர் பராமரிப்பு சேவைகளை கிராமப்புறங்களுக்கும், குறிப்பாக உடல் ரீதியிலான குறைபாடுகளுக்கு உள்ளாகியுள்ள முதியோருக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.