விளையாட்டு
சி.எஸ்.கே-வுக்கு எதிராக பும்ரா ஆடுவதில் சந்தேகம்: மும்பைக்கு பெரும் பின்னடைவு
சி.எஸ்.கே-வுக்கு எதிராக பும்ரா ஆடுவதில் சந்தேகம்: மும்பைக்கு பெரும் பின்னடைவு
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. சந்தேகம் இத்தொடரில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில், சென்னை அணிக்கு எதிராக மும்பையின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது முதுகு காயம் ஏற்பட்டது. சிட்னியில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டின் போது முதுகு வலியால் அவர் அவதிப்பட்டார். அதனால், அந்தப் போட்டியின் பாதியில் வெளியேறினார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வரும் பும்ரா, அண்மையில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவில்லை. அவர் இன்னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அதனால், அவர் பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவின் அனுமதியைப் பெற்ற பிறகு, ஏப்ரல் முதல் வாரத்தில் பும்ரா மும்பை இந்தியன்ஸ் முகாமில் சேருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் உட்பட அனைத்து தரப்பினரும் அவரை மீண்டும் போட்டி கிரிக்கெட்டில் ஆட வைப்பதில் அவசரப்படுத்துவதைத் தவிர்க்க ஆர்வமாக உள்ளனர், அதற்கு பதிலாக அவர் முழுமையாக குணமடைய போதுமான நேரம் இருப்பதை உறுதி செய்து வருகிறார்கள். தற்போது முழு உடற்தகுதியை மீண்டும் பெறுவதற்காக பும்ரா பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.இதன் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் அரங்கேறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமாடுவதில் சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் இன்னும் சில போட்டிகளில் ஆட முடியாமல் போகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை போட்டியைத் தொடர்ந்து, மும்பை அணி மார்ச் 29 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள அகமதாபாத் செல்கிறது. பின்னர், மார்ச் 31 அன்று நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சொந்த மைதானத்தில் நடக்கும் ஆட்டத்திற்காக மும்பைக்குத் திரும்புகின்றனர்.ஏப்ரல் முதல் வாரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி ஏப்ரல் 4 ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது, அதைத் தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை மும்பையில் வைத்து எதிர்கொள்கிறது. பரபரப்பான தொடக்க பதினைந்து நாட்களுக்குப் பிறகு, மும்பை அணிக்கு ஆறு நாள் இடைவெளி கிடைக்கும். பின்னர் ஏப்ரல் 13 ஆம் தேதி அடுத்த போட்டிக்காக டெல்லிக்குச் செல்லும்.