இந்தியா
கோயிலுக்குள் இரும்புக் கம்பியுடன் நுழைந்து பக்தர்களை தாக்கிய மர்ம நபர்!
கோயிலுக்குள் இரும்புக் கம்பியுடன் நுழைந்து பக்தர்களை தாக்கிய மர்ம நபர்!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு நேற்றும் ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோயிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.
கையில் ஒரு இரும்புக் கம்பியுடன் வந்த அவரை பார்த்த கோயில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார். பின் பக்தர்களும் ஏனைய ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அவர் தாக்கினார்.
பிற பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில், அவர்களில் ஒரு பக்தர் மற்றும் ஊழியர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொற்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பொலிஸார் அதிக சோதனைக்கு பின் பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் அரியானாவின் யமுனா நகரில் வசிக்கும் சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.