பொழுதுபோக்கு

மும்மொழிக் கொள்கை… அரசியல் அழுத்தம் காரணமாக நீயா நானா விவாத நிகழ்ச்சி நிறுத்தமா? நெட்டிசன்கள் விமர்சனம்

Published

on

மும்மொழிக் கொள்கை… அரசியல் அழுத்தம் காரணமாக நீயா நானா விவாத நிகழ்ச்சி நிறுத்தமா? நெட்டிசன்கள் விமர்சனம்

தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் குறித்து, விஜய் டிவியில் பிரபலமான டாக்‌ஷோ நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டு, ஒளிபரப்பாக இருந்த நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சிக்கு பதில் வேறு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதனால், மும்மொழிக் கொள்கை குறித்த நீயா நானா நிகழ்ச்சி அரசியல் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டதா என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாக தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் அதில் மும்மொழி கொள்கை தொடர்பாகவும் தமிழ்நாடு அரசுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் இடையே பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு சமக்ர சிக்‌ஷா திட்டத்தை செயல்படுத்தியதற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,150 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது. இதற்கு மத்திய அரசு தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டம் தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என்று தி.மு.க திட்டவட்டமாக மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கை தேவை இல்லை என்பதில் மாநிலத்தில் ஆளும் தி.மு.க அரசு உறுதியாக உள்ளது. இதனால், தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதே போல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல விவாத நிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில், மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டு, கடந்த மார்ச் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாக உள்ளதாக சமூக வலைதளங்களில் புரோமோ வெளியானது. ஆனால், திடீரென, மும்மொழிக் கொள்கை குறித்த நீயா நானா விவாத நிகழ்ச்சியின் எபிசோடு நிறுத்தப்பட்டு, வேறு எபிசோடு ஒளிபரப்பானது. சமூக வலைதளங்களிலும் நீயா நானா எபிசோடு புரோமோ போஸ்ட்கள் நீக்கப்பட்டன. இதனால், நீயா நானா விவாத நிகழ்ச்சியில் மும்மொழிக் கொள்கை குறித்த எபிசோடு யாருடைய அழுத்தத்தின் பேரில் நிறுத்தப்பட்டது. எதற்காக நிறுத்தப்பட்டது என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், வலதுசாரி அமைப்புகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மும்மொழிக்  கொள்கை தொடர்பான எபிசோடு ஒளிப்பரப்பவுதில் இருந்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் பின்வாங்கியிருக்கிறது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.நீயா நானா விவாத நிகழ்ச்சியில் மும்மொழிக் கொள்கை குறித்த எபிசோடில், மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியவர்கள், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இடையே நடைபெற்ற விவாதத்தில், மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியவர்கள் எதிர் தரப்பு முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்க திணறியதாகவும் தெரிகிறது. இதனால்தான், மும்மொழிக் கொள்கை குறித்த நீயானா நானா நிகழ்ச்சியின் எபிசோடு நிறுத்தப்பட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version