நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 20/03/2025 | Edited on 20/03/2025
இசைஞானி இளையராஜா, 35 நாட்களில் தான் எழுதி முடித்த முழு சிம்பொனியை ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் சாதனை படைத்த அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து விட்டு லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இளையராஜாவின் நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசு சார்பில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்பு அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் கௌரவம் அளிக்கப்பட்டது. அப்போது அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், இளையராஜா சாதனைகளைச் சொல்லி நாட்டிற்கே பெருமை என பாராட்ட அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளையராஜாவை சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். நேற்று சூர்யா, அவரது தந்தை சிவகுமார் மற்றும் சூர்யாவின் தங்கை பிரிந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அப்போது சிவகுமார் இளையராஜாவுக்கு தங்க செயினை பரிசாக அளித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மூத்த இயக்குநர்கள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்தியுள்ளனர். ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர்வி. உதயகுமார், செயலாளர் பேரரசு மற்றும் நிர்வாகிகள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இளையராஜாவிற்கு மாலை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.