பொழுதுபோக்கு
நடிகைகளுக்கு மட்டும் அல்ல… தனது மனைவியையே கவிதையால் கிண்டல் செய்த கண்ணதாசன்; அது என்ன கவிதை?
நடிகைகளுக்கு மட்டும் அல்ல… தனது மனைவியையே கவிதையால் கிண்டல் செய்த கண்ணதாசன்; அது என்ன கவிதை?
தனது தனித்துவமாக பாடல்கள் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன், தனது பாடல்களில் நடிகைகள் பலரை கிண்டல் செய்திருப்பதை கேட்டிருப்போம். ஆனால் அவர் கவிதையால் தனது மனைவியே கிண்டல் செய்துள்ளார் என்று அவரது மகள் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் கவிஞர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன், தன் வாழ்நாளில் தான் சந்தித்த அனுபவங்களை வைத்து பல பாடல்களை எழுதியுள்ளார். கண்ணதாசனின் கை வண்ணத்தில் வந்த பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.அதேபோல் ஒரு கவிஞர் – இசையமைப்பாளர் இடையே நெருக்கம் இருந்தது என்று எடுத்துக்கொண்டால் அதில் முன்னணியில் இருப்பர் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதனும் தான். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளனர். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கண்ணதாசன் பல பாடல்களை எழுதியிருந்தாலும், எம்.எஸ்.வியுடன் இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே தனி ரகம் என்று சொல்லலாம்.திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல், கவிதைகள் எழுதுவதிலும் வல்லவராக இருந்துள்ள கண்ணதாசன், தனது பாடல்களில், சில நடிகைகளை கிண்டல் செய்துள்ளார். தான் எந்த இடத்தில் இருந்தாலும் அதற்கு ஏற்றபடி, தனது கவித்துவதை காட்டிவிடும், கண்ணதாசன் வீட்டிலும் அதை தொடர்ந்துள்ளார். வீட்டிலும் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சின்ன கவிதைகள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்த கண்ணதாசன் தனது மனைவியை பற்றியும் கிண்டலா கவிதை பாடியுள்ளார்.தனது மனைவியை பார்த்து ‘’கவிஞன் அவன் பாடுவது தமிழ்ப்பாட்டு, ஆனால் அவன் கட்டிக்கொண்ட பொண்டாட்டி கைநாட்டு’’ என்று பாடுவார். 3-ம் வகுப்பு வரை படித்திருந்த கண்ணதாசனின் மனைவி, அதன்பிறகு முன்னேறி கையெழுத்து போட கற்றுக்கொண்டாலும், கண்ணதாசன் கடைசிவரை தனது மனைவியை கைநாட்டு என்று தான் அழைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வளவு சொல்றீங்க, உங்க காது ஓரமா நரைத்த முடி இருக்கிறதே வயசாகுது நீங்க என்ன இப்படி பேசுறீங்க என்று என்று கேட்டுள்ளார். மனைவியின் கேள்விக்கும் பதில் அளித்த கண்ணதாசன், ‘’காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டுதடி’’ என்று கவிதையால் பதில் அளித்துள்ளார் கண்ணதாசன். பின்னாளில் இந்த வரிகள் ஒரு முழு பாடலான வடிவம் பெற்றது என்று கண்ணதாசனின் மகள்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.