பொழுதுபோக்கு
கண்ணீரில் தத்தளித்த பாரதிராஜா: மனோஜ் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி
கண்ணீரில் தத்தளித்த பாரதிராஜா: மனோஜ் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 48 வயதிலேயே அவர் உயிரிழந்துள்ளது பாரதிராஜா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023-ல் வெளியான “மார்கழி திங்கள்” படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.மனோஜ் பாரதி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு டூப்பாக நடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. எந்திரன் படத்தில்தான் அவர் ரஜினிக்கு டூப் போட்டுள்ளார்.ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ், அப்படத்தில் ரஜினி சிட்டி ரோபோவாக ஐஸ்வர்யா ராயுடன் காரில் பயணிக்கும் காட்சியில் ரஜினிக்கு டூப் போட்டு நடித்தவர் மனோஜ் பாரதிராஜாதான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக “ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். இந்நிலையில், மனோஜ் பாரதி மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மனோஜ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மனோஜ் பாரதி மறைவுக்கு இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் பிரபு, சூர்யா, கார்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.நடிகர் மனோஜ் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்குநடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜா இல்லத்தில் திரை உலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.