இந்தியா
புதுச்சேரி அமைச்சர் வீடு முற்றுகை: 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
புதுச்சேரி அமைச்சர் வீடு முற்றுகை: 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலக வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழல் வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இவ்வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகக்கோரியும் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சர் லட்சுமிநாராயணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்காக, காந்தி வீதி – நேரு வீதி சந்திப்பில் இருந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் வீடு அமைந்துள்ள பெருமாள் கோயில் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர்.அப்போது பேரணியாக வந்தவர்களை தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலையிலேயே அமர்ந்து அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தியும், அமைச்சர் பதவி விலகக்கோரியும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.