இலங்கை

கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வர் தனித் தீர்மானம்!

Published

on

கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வர் தனித் தீர்மானம்!

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.

 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (02) உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் மாறுவதில்லை. 

Advertisement

தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை மத்திய அரசு மறந்துவிடுவதால், கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் ஒருவர்கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் நரேந்திர மோடி சொன்னார். ஆனால், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. 

Advertisement

97 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். கடந்த 2024ல் 530 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவரது புள்ளிவிவரப்படி ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்கள் சராசரியாக கைது செய்யப்படுகிறார்கள்.

அண்டை நாடான இலங்கை இந்திய மீனவர்கள் மீது எவ்வித இரக்கமும் இன்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக, ஏன் அடியோடு பறிக்கும் விதமாக இலங்கை கடற்படையும் இலங்கை அரசும் செயல்படுவது கவலை அளிக்கிறது, இது கண்டிக்கத்தக்கது. 

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதை வலியுறுத்தி முதலமைச்சராக நான் 74 கடிதங்களை வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமருக்கு எழுதி இருக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தபோதெல்லாம் இது குறித்து வலியுறுத்தி இருக்கிறேன்.

கடிதம் எழுதும்போதெல்லாம், இலங்கையில் இருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவதும், பிறகு கைது செய்யப்படுவதுமாக இலங்கை செயல்பட்டு வருகிறது. 

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கச்சத் தீவை மீட்பதே என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக வலியுறுத்த விரும்புகிறேன்.

Advertisement

கச்சத்தீவை மாநில அரசுதான் வழங்கியது என்பதுபோல பிரச்சாரம் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் செய்வதைப் போல மத்திய அரசும் செய்வது வருந்தத்தக்கது, ஏற்க முடியாதது.

 தனித்தீர்மானம்: எனவே, ‘கச்சத்தீவை மீட்கும் வகையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும், அரசுமுறை பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி இலங்கை சிறையில் வாடும் இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

 மீனவர்கள் நலன் கருதி இத்தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்தார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version