இலங்கை

திருகோணமலையில் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல்

Published

on

திருகோணமலையில் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல்

திருகோணமலை நிலாவெளி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிப்பதற்காக சென்ற இரு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, இளைஞர் குழுவொன்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (31) தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் நிறுத்த முயன்ற நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநருக்கு ஆதரவாக அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர் குழு ஒன்று பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

சம்பவத்தில் பொலிஸார் மற்றும் இளைஞர் குழுவுக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதுடன், குறித்த குழுவினர் சீருடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி சைக்கிள் செலுத்துநரை பிடித்திருந்த அதிகாரிகளை அக்குழுவினர் வீதியிலிருந்து வீடொன்றினுள் இழுத்துச் சென்று அடைத்து தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசியும் அவ்விளைஞர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனத்துங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

Advertisement

நிலாவெளி பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்த ஒரு குழுவினர் தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. நிலாவெளி பகுதியில் மார்ச் 31 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. 10 பேர் அடங்கிய குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அவர்களை தடுத்து தாக்கியுள்ளனர்.

Advertisement

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைச் சட்டக் கோவைக்கமைய தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version