இந்தியா
வக்பு வாரிய சட்டத் திருத்தம் இன்று தாக்கல்… மசோதா என்ன சொல்கிறது? எதிர்ப்பு ஏன்?
வக்பு வாரிய சட்டத் திருத்தம் இன்று தாக்கல்… மசோதா என்ன சொல்கிறது? எதிர்ப்பு ஏன்?
வக்பு சட்டத்திருத்த மசோதா என்றால் என்ன?இஸ்லாமியத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துகளை குறிப்பிடுவது ஆகும். அசையும் சொத்தாகவோ அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம். இதுபோன்ற வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை தொடர்ந்து, மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, அந்த மசோதாவில் சில திருத்தங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.திருத்தங்கள் என்னென்ன?44 திருத்தங்களுடன் வக்பு வாரிய மசோதாவை விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 6 மாதங்களுக்கு ஒரு முறை வக்பு சொத்துகள் மீதான வருவாய் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநில மற்றும் மத்திய வக்பு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத 2 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். பெண்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். வக்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மாவட்ட நீதிபதி தலைவராகவும், மாநில அரசின் இணை செயலாளர் உறுப்பினராகவும் செயல்படுவார் போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்பு வாரியத்திற்கு நன்கொடையாக வழங்க முடியும்.வக்பு வாரிய சொத்துகளின் தரவுகள், பதிவுகள், தணிக்கை விபரங்கள், புகார்கள் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை வெளியிட டிஜிட்டல் இணையதளம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதா, மக்களவையில் இன்று நண்பகல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மீது 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதேவேளை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டால் திமுக நிச்சயம் எதிர்க்கும் என்றார்.எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பாஜக எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் இன்று மக்களவையில் இருக்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.