இந்தியா
வக்ஃபு மசோதா: மொத்த சொத்துகளின் எண்ணிக்கை 8.8 லட்சம் – சர்ச்சைக்குரிய நிலங்கள் குறித்து ஓர் அலசல்!
வக்ஃபு மசோதா: மொத்த சொத்துகளின் எண்ணிக்கை 8.8 லட்சம் – சர்ச்சைக்குரிய நிலங்கள் குறித்து ஓர் அலசல்!
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பெரும்பான்மையுடன் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் சிறுபான்மை விவகார அமைச்சகம் தொகுத்த தரவுகளின் படி, 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள மொத்த 8.8 லட்சம் வக்ஃபு சொத்துகளில், 73,000-க்கும் அதிகமானவை சர்ச்சையில் இருப்பதாகவும், இந்த மசோதாவின் கீழ் புதிய விதிகளால் இவை பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Waqf Bill passed, tentative number: 8.8 lakh properties, over 73,000 under dispute மதம், தொண்டு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இஸ்லாமியர்களால் ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட சொத்தாக வக்ஃபு கருதப்படுகிறது. இந்த சொத்தின் பயனாளிகள் வெவ்வேறு நபர்களாக இருந்தாலும், சொத்தின் உரிமை கடவுளிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.வக்ஃபு அசெட்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆஃப் இந்தியா (WAMSI) தரவுத்தளமானது, மத்திய அரசால் பராமரிக்கப்படுகிறது. இதில் அனைத்து வக்ஃபு சொத்துகள், அவற்றின் வகைகள், மேலாண்மை மற்றும் தற்போதைய நிலை ஆகிவயவை அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த தரவுத்தளத்தின்படி, 8.8 லட்சம் வக்ஃபு வாரிய சொத்துகள் உள்ளன. இவற்றில் 2.4 லட்சம் என்ற அளவில் அதிகப்படியான சொத்துகளை உத்தர பிரதேச மாநிலத்தின் சன்னி மற்றும் ஷியா வாரியங்கள் கொண்டுள்ளன. உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் (80,480), பஞ்சாப் (75,511), தமிழ்நாடு (66,090) மற்றும் கர்நாடகா (65,242) ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான வக்ஃபு வாரிய சொத்துகள் உள்ளன. உத்தர பிரதேசத்தை தவிர தனித்தனி சன்னி மற்றும் ஷியா வாரியங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக பீகார் இருக்கிறது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த வக்ஃபு வாரியங்கள் உள்ளன.6.2 லட்சத்தில், அனைத்து வக்ஃபு சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் கல்லறைகள், விவசாய நிலங்கள், மசூதிகள் கடைகள் அல்லது வீடுகள் ஆகியவை உள்ளன. அனைத்து வக்ஃபு சொத்துகளில் மயானங்கள் மட்டுமே 17.3 சதவீதம் ஆகும். விவசாய நிலம் மற்றும் மசூதிகள் முறையே 16 சதவீதம் மற்றும் 14 சதவீதம் என அடுத்த இடங்களை பெறுகின்றன.எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடையே, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பியது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த எம்.பி-க்களால் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களை ஏற்றுக் கொண்டது. எனினும்,எதிர்க்கட்சியினர் பரிந்துரைத்து 44 திருத்தங்களை நிராகரித்தது.மாநில வக்ஃபு வாரியங்களின் அமைப்பை மாற்றுவது உள்ளிட்ட வக்ஃபு சொத்துகள் நிர்வகிக்கப்படும் மற்றும் ஒழுங்குப்படுத்தப்படும் விதத்தை இந்த மசோதா மாற்றுகிறது.வக்ஃபு சொத்துகளில் எவை சர்ச்சைக்குரியவை?வக்ஃபு அசெட்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆஃப் இந்தியா (WAMSI) தரவுத்தளத்தின்படி, ஆக்கிரமிக்கப்பட்டவை, வழக்கின் கீழ் அல்லது அந்நியப்படுத்தப்பட்டவை என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தற்போது சர்ச்சையில் உள்ளன. இது தவிர வழக்கின் கீழ் உள்ள சொத்துகள் இரண்டு வகைப்படும். தனிநபர்கள் தொடர்பான சிவில் வழக்குகளை உள்ளடக்கிய வெளிப்புற வழக்கு அல்லது வக்ஃபு வாரியத்தில் உள்ள தகராறுகளை உள்ளடக்கிய உள் வழக்கு ஆகும். அந்நியப்படுத்தப்பட்ட சொத்துக்கள் என்பது உரிமையாளர்களால் “சட்டவிரோத” இடமாற்றங்களில் ஈடுபட்டு சிவில் வழக்குகளுக்கு உட்பட்டவை. ஆக்கிரமிப்பு சொத்துக்கள் என்பது அரசாங்கம் தனது நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறக்கூடியவை. இதனால் ஒரு தீர்ப்பாயம் அல்லது முன்மொழியப்பட்ட மசோதாவின் கீழ், மாவட்ட நீதிபதி மற்றும் இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள மாநில அரசு அதிகாரியை உள்ளடக்கிய தீர்ப்பாயம் மூலம் சர்ச்சைக்கு தீர்வு காணலாம். அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, 1992 இல் இடிக்கப்பட்ட பின்னர் நீண்ட காலமாக சட்ட வழக்குக்கு உட்பட்டது. இது இந்தியாவில் உள்ள வக்ஃபு சொத்துகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இப்போது ராமர் கோயில் இருக்கும் இடத்தில் உள்ள சர்ச்சை, முதலில் உள்ளூர் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தால் 2019 இல் தீர்ப்பளிக்கப்பட்டது.பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக சர்ச்சைக்குரிய சொத்துகள் உள்ளன. வக்ஃபு அசெட்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆஃப் இந்தியா (WAMSI) தரவுத்தளத்தின்படி, பஞ்சாபில் 75,511 வக்ஃபு சொத்துக்களில் 56.5% “ஆக்கிரமிப்பு” என்று கருதப்படுகிறது. இது நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கை கொண்டதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகப்படியான வக்ஃபு சொத்துகள் உத்தர பிரதேசத்தில் இருந்தாலும், அங்கு 3,044 சொத்துக்கள் மட்டுமே சர்ச்சையில் உள்ளன. பஞ்சாபிற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 3,742 சர்ச்சைக்குரிய வக்ஃபு சொத்துகள் இருக்கின்றன.- Anjishnu Das