பொழுதுபோக்கு
வெயில் படத்தில் நான் செய்த தவறு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்; இயக்குனர் வசந்தபாலன்!
வெயில் படத்தில் நான் செய்த தவறு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்; இயக்குனர் வசந்தபாலன்!
தான் இயக்கிய வெயில் படத்தில் வில்லன் கேரக்டரை பன்றி மேய்ப்பவராக காட்டியதற்காக இப்போது நான் வருத்தப்படுகிறேன் என்று இயக்குனர் வசந்தபாலன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஆல்பம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து, தனது 2-வது படமாக வெயில் படத்தை இயக்கினார். பசுபதி, பரத், பாவனா, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் ரவி மரியா. இவருக்கும் பரத்க்கும் இடையே, விளம்பர கம்பெனி தொடர்பான பிரச்னை இருந்தாலும் ரவி மரியாவின் முக்கிய தொழிலாக இந்த படத்தில் பன்றி மேய்ப்பவர் கேரக்டரில் நடித்திருப்பார். தேசிய விருது, தமிழக அரசின மாநில விருது, ஃபிலிம்பேர் விருது என பல விருதுகளை வாங்கிய வெயில் படம் வெளியாகி 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த படத்தின் தான் செய்த ஒரு தவறு வசந்தபாலன் மன்னிப்பு கேட்டுள்ளார்.சென்னையில் நடைபெற்ற பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய இயக்குனர் வசந்தபாலன், இயக்குநர் பா.ரஞ்சித் வருவதற்கு முன்னால், பட்டியலின மக்கள் குறித்த பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை தமிழ் சினிமாவில் வேறொன்றாக இருந்தது. நாகராஜ் மஞ்சுலே, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் வந்த பிறகு அந்த பார்வை மொத்தமாக மாறியது.என்னுடைய ‘வெயில்’ படத்தில் வில்லன் கேரக்டரை பன்றி மேய்ப்பவராக சித்தரித்ததற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாம் சித்தரிக்கும் கேரக்டர்களை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும், அந்த கேரக்டர்கள் சிறுபான்மையினராக, தலித்தாக, மூன்றாம் பாலினத்தை எப்படி அணுக வேண்டும் என்ற கவனத்தை மிக கூர்மையாக பா.ரஞ்சித் தனது கமர்ஷியல் படங்கள் வாயிலாக கொண்டு வந்ததை முக்கியமான மாற்றமாக பார்க்கிறேன். ரஜினி படம் கிடைத்த பிறகு, பணம் வந்த பிறகு திருமண மண்டபம் கட்டலாம், பங்களா வாங்கலாம், ஆனால் பா.ரஞ்சித் குகை நூலகத்தை கட்டியிருக்கிறார். மிகப்பெரிய விஷயம் இது என்று பா.ரஞ்சித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.