இலங்கை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சட்டத்தை ஏற்பது அவசியம்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சட்டத்தை ஏற்பது அவசியம்!
இலங்கைக்கு மன்னிப்புச்சபை வலியுறுத்து
உள்நாட்டு ஆயுத மோதலின்போது இடம்பெற்ற குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கும், இந்தப் பிரச்சினைகளுக்கு நீதியைக் காண்பதற்கும் உதவும் என்பதால், உரோம் சட்டத்தை ஏற்பது அவசியம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் மேலும் தெரிவித்ததாவது:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதலின்போது பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும்.
இலங்கை இன்னமும் சர்வதேச குற்றங்களை அதன் உள்நாட்டு சட்டக் கட்டமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோர் நீதியை நாடும்போது துன்புறுத்தலை எதிர்கொள்வது உடனடியாக அவசியம் – என்றார்.