இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டம் மோசமாகப் பிரயோகம்!
பயங்கரவாதத் தடைச்சட்டம் மோசமாகப் பிரயோகம்!
உடன் தடைசெய்யப்பட வேண்டும்
அரசுக்கு மன்னிப்புச்சபை அழுத்தம்
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்போதும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றது. விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தச் சட்டம் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் உள்ளதாவது:
சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியம் குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. எனினும், அந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை. இலங்கையில் தற்போதும்கூட அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்களுக்கு எதிராகவும், உடன்பட மறுப்பவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மீண்டும் மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த பயங்கரமான சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள் உறுதிமொழி வழங்கிய போதிலும் அது தொடர்ந்தும் சட்டப்புத்தகத்தில் நீடிப்பது குறித்தும், பயங்கரவாதச் செயல் அல்லாத குற்றங்கள் உட்பட பலவற்றை விசாரிப்பதற்காகத் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்தும் நாங்கள் அறிந்துள்ளோம். இதனால், நாங்கள் ஏமாற்றமடைகின்றோம்.
இந்த அரசாங்கம் பதவிக்குவந்த நாள்முதல் பல தடவைகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. பயங்கரவாதக் குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான நியாயபூர்வமான சந்தேகங்கள் இல்லாத போதிலும், அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை நாடுகின்றமை வருத்தத்துக்குரிய விடயமாகும் – என்றுள்ளது.