இலங்கை
இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!
இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. எந்தவொரு நாட்டாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விலைக்குவாங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கமளித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டது. அது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. பாதுகாப்பு ‘ஒத்துழைப்பு’ ஒப்பந்தமென தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் அமுலில் உள்ள உள்நாட்டு சட்டம் மற்றும் தேசியக் கொள்கை ஆகியவற்றுடன் முரண்படாத விதத்திலும், சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாத வகையிலும்தான் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும்போது தேசியச் சட்டம், இராணுவச் சட்டம், அரசுகளின் சுயாதீனம், ஆட்புல ஒருமைப்பாடு என்பன மீறப்படமாட்டாது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல உள்விவகாரங்களில் தலையிட முடியாது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் தற்போதும் முப்படைகளுக்கிடையில் பயிற்சிகள் நடக்கின்றன. உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்குரிய ஒப்பந்தமே இது. தகவல் பரிமாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உயிர்த்தஞாயிறுத் தாக்குதலின்போது இந்தியாவே முதன்முதலாக புலனாய்வுத் தகவலை வழங்கியது. இப்படியான விடயங்கள் மட்டுமே மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் நடைபெறும்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் நிலப்பரப்பை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் என ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டோம். சீனாவில் பிரிவினைவாத பிரச்சினை ஏற்பட்டால்கூட சீனாவுக்கு எதிராக நாம் எமது நாட்டு நிலப்பரப்பை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம். இது எமது கொள்கை.
இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவில்லை. தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அவற்றை பெறலாம். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக உயிரை பணயம் வைத்து போராடியவர்கள் நாம். எனவே, எந்தவொரு நாடாலும் எம்மை விலைக்கு வாங்கவும் முடியாது. அடிபணிய வைக்கவும் முடியாது’ -என்றார்.