நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 09/04/2025 | Edited on 09/04/2025

அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். 

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கரு. பழனியப்பன், தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் படக்குழுவை வாழ்த்தினார். இடையில் விஜய் நடிகராக அறிமுகப்படுத்தியது குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “ஒரு பிள்ளையை செதுக்குவது சாதாரண விஷயம் கிடையாது. அதை தங்கர் பச்சன் வேறொரு இளைஞரிடம் கொடுத்துவிட்டார். நானும் அதைத் தான் செய்ய நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. முதலில் விஜய் நடிக்க வேண்டும் என சொன்ன போது, அவரை ஃபோட்டோ ஷூட் எடுத்துவிட்டு அதை நிறைய இயக்குநர்களிடம் கொடுத்து, நான் தயாரிக்கிறேன், நீங்க டைரக்ட் பண்ணுங்க என்றேன். அதை யாருமே ஒத்துக்கவில்லை. 

Advertisement

கடைசியாக நானும் என் மனைவியும் ஆர்.பி. சௌத்ரி சாரிடம் போனோம். அவர் புது புது கலைஞர்களை அறிமுகப்படுத்துவார். அவரிடம் கேட்ட போது, ‘நீயே பெரிய டைரக்டர், நீயே விஜயை வைச்சு படம் எடு’ என்றார்.  அதனால் கட்டாயமாக விஜய்யை வைத்து படம் எடுக்கும் சூழல் உருவாகிவிட்டது. ஆனால் தங்கர் பச்சான் அப்படி பண்ணவில்லை. அவரும் அவர் மகனும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.