நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 09/04/2025 | Edited on 09/04/2025
எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.
திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவர் மறைந்து தற்போது ஒராண்டைக் கடந்துள்ளது. இதையொட்டி ரஜினிகாந்த் தற்போது ஆர்.எம்.வி. குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “‘ஆர்.எம்.வி – தி கிங் மேக்கர் ’ அவரை பற்றிய ஆவணப்படத்தில் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. என் மீது ரொம்ப அன்பு காட்டுனவங்க பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வி… இவங்க எல்லாம் இப்போது இல்லைன்னு சொல்லும் போது ரொம்ப மிஸ் பன்றேன். பாட்ஷா விழாவில் ஆர்.எம்.வி. இருந்த போது வெடிக்குண்டு கலாச்சாரத்தைப் பற்றி பேசினேன். முதலமைச்சரை வைத்துக் கொண்டு நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. அப்போது அதுப் பற்றி சரியான தெளிவு இல்லை. அதன் பிறகு ஆர்.எம்.வி-யை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா தூக்கிவிட்டார். அரசுக்கு எதிராக ரஜினி எப்படி பேச முடியும் என சொல்லி அவரை தூக்கிவிட்டார்.
அது தெரிஞ்ச உடனே எனக்கு ஆடிப்போய்டுச்சு. என்னால் தான் அவருக்கு இப்படி ஆயிடிச்சுன்னு நைட்டு ஃபுல்லா தூக்கம் வரல. அப்போதே ஆர்.எம்.வி-க்கு ஃபோன் பன்னேன், யாரும் எடுக்கல. காலையில் ஃபோன் பண்ணும் போது அவர் எடுத்தவுடன் ஒன்னுமே நடக்காத மாதிரி, பேசினார். பதவி தான, விடுங்க.. அத பத்தி எதுவும் நினைக்காதீங்க, நீங்க மகிழ்ச்சியா இருங்க.. இப்ப என்ன ஷூட்டிங்குன்னு சர்வ சாதாரணமா கேட்டார். எனக்கு அந்த தழும்பு எப்போதுமே போகாது. ஜெயலலிதாவுக்கு எதிராக அந்த விழாவில் நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும் இந்த காரணம் ரொம்ப முக்கியமானது. அதுக்கப்புறம் ஆர்.எம்.வி-கிட்ட நான் ஜெயலலிதாவிடம் பேசட்டுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், அந்தம்மா ஒரு முடிவெடுத்தா மாத்த மாட்டாங்க, நீங்க பேசி, இருந்த மரியாதையையும் இழக்க வேண்டாம். அப்படி நீங்க சொல்லித்தான் நான் அங்க சேர வேண்டும்னு அவசியம் இல்லை. நீ விட்டுடு என சொன்னார். அந்த மாதிரி ஒரு பெரிய மனிதர். அவர் உண்மையிலேயே கிங் மேக்கர்” என்றார்.