இலங்கை
காணாமலாக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி வழங்குவோம்!
காணாமலாக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி வழங்குவோம்!
பிரதமர் ஹரிணி தெரிவிப்பு
காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதியை வழங்கும் என்று பிரதமர் ஹரிணி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:
காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில், யாருக்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டதோ அவர்கள் அனைவருக்கும் நீதியையும் சமத்துவத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் உள்ளது. ஆனால், இந்த விடயங்கள் சட்ட ரீதியாகவும், நிறுவன மயப்பட்டும் செய்யப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட நிறுவன ரீதியான தோல்விகளும், முறைமை ரீதியான தோல்விகளுமே இந்த விடயங்களில் தாமதத்துக்கு முதன்மையான காரணங்களாகும். எனவே நாம் அந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.
நிவாரணம் வழங்கும் அலுவலகம் மற்றும் காணாமற்போனோருக்கான அலுவலகம் என்பன பெயரளவில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை. போதுமானளவு பலமில்லாதமையாலும் அவை தோல்வியடைந்தன. ஆதலால், கடந்தகாலப் பலவீனங்களைச் சரிசெய்தே பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறே நாங்கள் பயணித்து வருகின்றோம் – என்றார்.