இலங்கை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ; ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சர்வதேச ஆதரவு
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ; ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சர்வதேச ஆதரவு
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அல்ஜசீரா நேர்காணலின் பின்னரே பட்டலந்த விடயம் பேசும்பொருளாக மாறியதாக கூறுகின்றனர். அப்படி ஒன்றும் இல்லை எங்களுக்கு அரசியல் முகாமைத்துவம் உள்ளது.
ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே எமது சகோதர, சகோதரிகள் உயிர் தீயாகம் செய்தனர்.
இந்த நாட்டை மீட்கும் நோக்கமே இருந்தது.
சாதாரண பொது மக்களுக்கு நீதியை நிலைநாட்டக் கூடிய நாடாக எமது நாட்டை மாற்றவே முயற்சித்தோம்.
கடந்த 35 ஆண்டுகளாக சிறு ஆயுதங்கள் ஏனும் நாங்கள் கையில் எடுக்கவில்லை.
1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்ட எமது 08 சகோதரர்களை கொலை செய்தனர்.
எனினும் நாங்கள் உண்டி வில்லை ஏனும் கையில் எடுக்கவில்லை. பயத்தினால் அல்ல.
ஆயுதத்தில் உள்ள பலம் தொடர்பில் எங்களுக்கு நன்கு தெரியும்.
அதனை கையில் எடுத்தால் மீண்டும் கீழே வைக்க முடியாது. அது கிட்டாரில்லை.
பிரதான கொலையாளிகளுக்கு கட்டாயம் நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்குவோம்.
வெளிநாடுகளில் உள்ள சிறந்த அதிகாரிகளையேனும் கொண்டு வந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சட்டரீதியான அனைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு அவர்களின் இறுதி காலத்தில் ஏனும் கட்டாயம் நாங்கள் தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அடுத்த விவாத நாளுக்கு முன்னர் இது தொடர்பான விசாரணை குழுவை ஜனாதிபதி நியமிப்பார்.
எமது மகன் வருவான் என தினமும் இரவு இரவாக கதவை திறந்து வைத்து காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கில் வாழ்ந்த அனைத்து அம்மாக்களுக்கு நாம் நீதியை பெற்று கொடுப்போம் என்றார்.
இதற்கிடையில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தை எதிர்வரும் பாராளுமன்ற நாளில் இரண்டாவது நாளாக நடத்துவதற்கு இன்று (10) சபை ஒப்புக்கொண்டது.
பாராளுமன்றம் மே 8 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.