இலங்கை
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி ; மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி ; மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு
அனுர அரசு சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனிடையே எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை விட நீர் காற்று சூரிய சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மலிவானது.
தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என தேர்தல் காலத்தில் கூறியது. ஆனால் இன்று டீசல் மாபியாவுக்கும் அனல் மின் மாபியாவுக்கும் அடிபணிந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அனுமதிகளை தாமதப்படுத்தி டீசல் மின் உற்பத்தி நிலைய மாபியாவிற்கு இடம்கொடுத்து வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தெரிவிததுள்ளார்.
இதனிடையே குறைந்த மின்சார தேவை உள்ள காலங்களில், சூரிய மின்கலங்கள் மூலம் பிரதான அமைப்பிற்குள் மின்சாரம் பாயும்போது, தேசிய அமைப்பின் சமநிலை சீர்குலைவதில்லை என எரிசக்தி நிபுணர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணி முதல் எதிர்வரும் 21 திகதி வரை கூரை சூரிய மின்கலங்களை அணைக்குமாறு மின்சார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.
பண்டிகைக் காலத்தில் மின்சார தேவை குறைவாக இருப்பதால், பிரதான அமைப்பின் சமநிலையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறைந்த மின் தேவை உள்ள நேரத்தில் அதிகப்படியான மின்சாரம் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட மின் சமநிலையின்மை காரணமாக பெப்ரவரி 9 ஆம் திகதி முழு நாட்டில் மின்சாரம் தடை ஏற்பட்டதென மின்சார சபை தெரிவித்துள்ளது.