விளையாட்டு
5 தொடர் தோல்விகள்… சி.எஸ்.கே பிளேஆப்க்கு முன்னேறுமா? வாய்ப்புகள் என்ன?
5 தொடர் தோல்விகள்… சி.எஸ்.கே பிளேஆப்க்கு முன்னேறுமா? வாய்ப்புகள் என்ன?
இந்திய மண்ணில் பரபரப்பாக அரங்கேறி வரும் 18-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி-20 தொடரில் களமாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்க ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது. ஆனால், அதன்பிறகு நடந்த 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து கடும் நெருக்கடியில் இருந்து வருகிறது. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகி நிலையில், சி.எஸ்.கே அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்த தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அவர் தலைமையிலான சி.எஸ்.கே அணி சொந்த மண்ணில் கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதனால் அந்த அணி பெரும் பின்னடை சந்தித்து இருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சி.எஸ்.கே அணியின் நெட் ரன்ரேட் இப்போது நெகடிவ் ஆக மாறி -1.554 என்று உள்ளது. பிளே-ஆப்க்கு முன்னேற அந்த அணி மீதமுள்ள எட்டு ஆட்டங்களில் அதிரடியாக ஆடி 16 புள்ளிகளை பெற வேண்டும். ஒரு போட்டியில் தோற்றால் கூட நிலைமை மோசமாகி விடும். அதனால் அவர்கள் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும், மேலும் மற்ற ஆட்டங்களில் சாதகமான முடிவுகளைப் பொறுத்தும் இருக்க வேண்டும்.கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்பாராத விதமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி தொடக்க ஆட்டங்களில் மோசமான தோல்விகளைச் சந்தித்தது. குறிப்பாக முதல் எட்டு ஆட்டங்களில் ஏழில் தோல்வியடைந்தது. இருப்பினும், 14 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்து, பிளேஆப்க்கு முன்னேறியது.