நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 16/04/2025 | Edited on 16/04/2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகச் சென்னை தி.மு.க. சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதில் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு முதல்வர் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, “உங்க எல்லோருக்கும் என்னை ஜெயம் ரவியாகத்தான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, ரவி மோகன். ஜெயம் ரவி என்பது என் அன்பு ரசிகர்களால் கிடைச்ச பெயர். ‘கராத்தே பாபு’ பட டீசரை பார்த்ததும் அமைச்சர் சேகர் பாபு ஃபோன் பண்ணார். பட டைரக்டருக்கும் ஃபோன் பண்ணார். பின்பு இருவரும் சேகர் பாபுவை பார்க்க போனோம். டைரக்டர் கொஞ்சம் பயந்துகிட்டே போனார். இவரைப் பார்த்ததும் சேகர் பாபு, ‘என்னப்பா நீங்க கராத்தே பாபு-ன்னு எதோ படம் எடுக்குறீங்க போல’, ‘ஆமா சார்’. ‘அந்த கேரக்டர் நம்மல மாதிரியே இருக்கேப்பா’, ‘அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார்’ என்று டைரக்டர் மழுப்பி பதில் சொன்னார். உடனே சேகர் பாபு, ‘தம்பி நாந்தான்பா கராத்தே பாபு’ என்றார். இப்படி அன்பாகவும் நகைச்சுவையாகவும் படத்துக்கு வாழ்த்து சொன்ன சேகர் பாபுவுக்கு எனது நன்றி.
முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாங்க எல்லாரும் அவர் உடல் நலத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை பண்ணிக்குறோம். என்னைக்குமே அவர் ஹெல்த்தியா இருக்கனும். அந்த எண்ணம் எங்களுக்கு இருக்கு. இது அவர் நம் முதலமைச்சர் என்ற ஒரு காரணத்துக்காக. இன்னொன்று சினிமாவை நெருக்கமா கொண்டவர். சினிமாவில் நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கார். குறிப்பா சொல்லனும்னா கிட்டதட்ட 90 ஏக்கர் நிலத்தை பையனூரில் சினிமா துறையினருக்கே ஒதுக்கி வச்சிருக்கார். இந்த மனசு யாருக்கும் வராது. கலைஞர் ஐயா ஆரம்பிச்சு வச்சதை இப்போ முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேத்திருக்கார். நடிகரா இருந்து அரசியல்வாதியா ஆனவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா நான் என்னைக்குமே ஒரு கலைஞனா மட்டுமே இருக்க ஆசைப் படுறேன்” என்றார்.
ரவி மோகன், டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. அதில் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாக வரும் ரவி மோகன் “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத் தான் தெரியும் ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. 17வருடங்களுக்கு முன் ஆர்.கே.நகர் மக்களால் கொடுக்கப்பட்ட பெயர் அது, கராத்தே பாபு” எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.