பொழுதுபோக்கு
“சேகர்பாபுவிடமிருந்து வந்த ஃபோன்…” – மேடையில் ரவி மோகன் பகிர்ந்த ரகசியம்!
“சேகர்பாபுவிடமிருந்து வந்த ஃபோன்…” – மேடையில் ரவி மோகன் பகிர்ந்த ரகசியம்!
சென்னை எழும்பூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரவி மோகன் பேசுகையில், “ஜெயம் ரவி என்கிற பெயர் அன்பு நண்பர்களால், ரசிகர்களால் எனக்கு கிடைத்த பெயர். இன்று ரவி மோகனாக உங்கள் முன்பு வந்து நிற்கிறேன். இப்படி ஒரு வசனத்தை கராத்தே பாபு என்ற படத்தில் பேசியிருந்தேன்.அதன் டீசரை பார்த்துவிட்டு எனக்கு அமைச்சர் சேகர்பாபுவிடம் இருந்து ஒரு ஃபோன் கால் வந்தது. எனக்கும் வந்தது. என் படத்தின் இயக்குநருக்கும் வந்தது. அவரைப் பார்க்க போனோம். ‘என்னப்பா கராத்தே பாபுன்னு படம் எடுக்குறீங்களாம். அந்த கேரக்டர் நம்மல மாதிரியே இல்லையா என கூறினார். இயக்குநர் அதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று மழுப்பலாக பதில் சொன்னார். உடனே சேகர்பாபு, ‘தம்பி நான் தான்பா கராத்தே பாபு’ என்றார். இப்படி நகைச்சுவையாகவும், அன்பாகவும், அந்தப் படத்துக்கு வாழ்த்து சொன்ன சேகர்பாபுவுக்கு என்னுடைய நன்றிகள்” என்றார்.”இங்கு நிறைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள், ஆனால் நான் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘கராத்தே பாபு’. இந்தப் படத்தில் சக்தி, நாசர், கே.எஸ்.ரவிகுமார், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அமைச்சர் சேகர் பாபுவின் ஆரம்ப கால வாழ்க்கையை மையப்படுத்தி இருப்பதாக டீசர் வந்த சமயத்தில் பேசப்பட்டது. ‘கராத்தே பாபு’ என சேகர் பாபு அப்போது அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது ரவி மோகனின் பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.