நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 16/04/2025 | Edited on 16/04/2025
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத்தே இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதல் பாகத்தில் நடித்த கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் இரண்டாம் பாகத்திலும் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலா வந்தது. சமீபத்தில் சிவ ராஜ்குமார் புற்றுநோய் பாதிப்பு காரணமாக அமெரிக்க சென்ற நிலையில் ஜெயிலர் 2 படத்தில் அவருக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சிவ ராஜ்குமார் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பி தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் நடித்துள்ள ‘45’ என்ற கன்னட படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜெயிலர் 2 தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அவர் பதிலளித்ததாவது, “ஜெயிலர் 2-வில் நானும் இருக்கேன். ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. எனக்கான சீன்கள் விரைவில் எடுக்கவுள்ளதாக நெல்சன் என்னிடம் சொன்னார். ஜெயிலர் 1-ல் என்னுடைய கேரக்டர் இந்தளவு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கவில்லை. அதில் ரஜினி சாருக்காத்தான் நடித்தேன். அவர் எனக்கு ஒரு தந்தை போன்றவர். அவர் படம் என்றதும் நெல்சனிடம் எனக்கு கதையே தேவையில்லை, ஒரு ஷாட்டில் நடித்தால் கூட ஓ.கே.தான் என சொன்னேன். இப்போதும் ஜெயிலர் படத்தில் என் கதாபாத்திரம் ஏன் இவ்வளவு கொண்டாடப்பட்டது என புரியவில்லை. என் மனைவியும் நீ ஜெயிலர் படத்தில் என்ன நடித்தாய், சிகரெட்டை பற்ற வைத்து டிஸ்யூ பாக்சை தள்ளிவிட்டாய் எனக் கேட்டார். என்னை நன்றாக காண்பித்ததற்கு ஒளிப்பதிவாளருக்கும் என் காட்சியை சிறப்பாக மெருகேற்றிய அனிருத்துக்கும் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.
அவரிடம் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவ ராஜ்குமார், “ஜெயிலர் 2 படத்தில் பாலகிருஷ்ணா சார் நடிக்கிறாரா என எனக்குத் தெரியவில்லை. நான் மீண்டும் என் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று மட்டுமே நெல்சன் சொன்னார். ஆனால் பாலகிருஷ்ணாவுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவரும் நானும் இதுவரை ஒன்றாக நடித்ததில்லை. ஆனால் நாங்கள் சினிமாவுக்கு வெளியே மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அவர் என் தந்தையை மாமா என்று அழைப்பார். எங்கள் குடும்பத்தினருக்கு மிக நெருங்கிய நண்பர், அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார். முன்னதாக பாலகிருஷ்ணாவும் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.