இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியாக பிள்ளையானைக் காண்பிக்கச் சதி
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியாக பிள்ளையானைக் காண்பிக்கச் சதி
சட்டத்தரணி கம்மன்பில தெரிவிப்பு
‘பிரபாகரனுடனேயே மோதிய பிள்ளையானை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் முயலை நரியாக காண்பிக்கும் தந்திரம் பிள்ளையான் விடயத்தல் எடுபடாது’ என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிள்ளையானின் சட்டத்தரணி என்ற வகையில், ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பிள்ளையானை உதயகம்மன்பில சந்தித்து கலந்துரையாடினார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கம்மன்பில் தெரிவித்ததாவது:
உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் பல தகவல்களை வெளியிட்டார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறினார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி உரையாற்றினார்.
நான் ஏப்ரல் 13ஆம் திகதி பிள்ளையானைச் சந்தித்தேன். இது தொடர்பில் அவரிடம் வினவினேன். உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஒரு வசனம்கூட பேசவில்லை என என்னிடம் கூறினார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையானுக்கு எவ்வித தகவல்களையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை அவர் சிறையில் இருந்தார். எனவே, பிள்ளையான்தான் தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயற்பட்டவர் எனக் கூறுபவர்களின் மூளையை முதலில் பரிசோதிக்க வேண்டும்.
ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றனரா? என்ற சந்தேகம் எழுகின்றது. ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்தஞாயிறு தாக்குல் தொடர்பில் முக்கியமான தகவல்கள் வெளிவரும் என ஜனாதிபதி கூறியிருந்தார். அதற்கு இன்னும் ஐந்து நாள்களே எஞ்சியுள்ளன.
எனவே, உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியொருவரை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆதலால், முயலை நரியாகக் காண்பிப்பதற்கு முற்படக்கூடும். பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்படலாம். எனினும், பிரபாகரனுடனேயே மோதி வெற்றிபெற்ற பிள்ளையானை பொறிக்குள் சிக்கவைக்கலாம் என அரசாங்கம் கருதினால் அது கைகூடாது’ – என்றார்.