விளையாட்டு
சி.எஸ்.கே-வின் புதிய வீரர் ஆயுஷ் மாத்ரே; 6 வயதில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரல்
சி.எஸ்.கே-வின் புதிய வீரர் ஆயுஷ் மாத்ரே; 6 வயதில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரல்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு மாற்றாக மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் இடம்பெற்றுள்ளார். இன்று (ஏப்ரல் 20) மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் அவர் களம் இறங்குகிறார்.ஆயுஷ் மாத்ரே இதுவரை ஒன்பது முதல்தர ஆட்டங்களில் மும்பைக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதுவரை இரண்டு சதங்கள் மற்றும் அரைசதம் என அதிரடியாக குவித்துள்ளார். குறிப்பாக, விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியின் போது, சவுராஷ்டிராவுக்கு எதிராக 148 ரன்களும், நாகாலாந்துக்கு எதிராக 181 ரன்களும் அவர் அடித்துள்ளார்.ஆயுஷ் மாத்ரேவின் சிறுவயது வீடியோ:இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலையில், வெங்சர்க்கார் கிரிக்கெட் அகாடமி (முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்க்கரால் இயக்கப்படுகிறது) சார்பில் யூடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், ஆயுஷ் மாத்ரேவின் சிறுவயது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அப்போது, அவரது தாத்தாவும் அவருடன் இருந்தார். சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சிக்கு ஆயுஷை அனுப்பியதற்கான காரணம் குறித்து அவரது தாத்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “ஆயுஷின் திறமையை நாங்கள் பார்த்தோம். கிரிக்கெட்டில் ஆயுஷ் மிகப்பெரிய அளவில் சாதிப்பானா அல்லது இல்லையா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆனால், அவனது திறமையை ஊக்குவிப்பது எங்கள் கடமை. அதற்காக தான் வெங்சர்க்கார் கிரிக்கெட் அகாடமிக்கும் ஆயுஷை அனுப்பினோம். சச்சினுக்கு முன்பாகவே அவர் ஜாம்பவானாக திகழ்ந்தார். எனவே, அப்படி ஒரு நபரின் கீழ் பயிற்சி பெற வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். சிறப்பான பயிற்சியை பெற்றால், ஆயுஷின் திறமை சீக்கிரமாகவே மேம்படும்” என்று அவர் கூறினார்.ஆயுஷ் மாத்ரே, கடந்த ஆண்டு இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிராக, மும்பை ரஞ்சி கோப்பை அணியின் தொடக்க வீரராக அறிமுகமானார்.”நான் 6 வயதில் விளையாட ஆரம்பித்தேன். ஆனால், எனது உண்மையான கிரிக்கெட் 10 வயதில் தொடங்கியது” என்று கடந்த ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஆயுஷ் மாத்ரே கூறியிருந்தார். “எனக்கு, மாட்டுங்காவில் உள்ள டான் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் அட்மிஷன் கிடைத்தது. எனது தாத்தா லக்ஷ்மிகாந்த் நாயக், என்னை தினமும் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனால், காலையில் மாட்டுங்காவுக்குப் பயிற்சிக்கு சென்று, அதன் பின்னர் பள்ளிக்கு செல்வேன். இதையடுத்து, மாலையில் சர்ச்கேட் பகுதியில் மற்றொரு பயிற்சிக்கு செல்வேன். என்னுடைய தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று தாத்தாவிடம் என் குடும்பத்தினர் கூறுவார்கள். ஆனால், தற்போது என் தியாகத்திற்கு பலன் கிடைப்பதை அவர்கள் பார்க்கின்றனர்” என்று ஆயுஷ் கூறினார்.