இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவு ; மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவு ; மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவை முன்னிட்டு இன்று காலை 8.45 முதல் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடல் பணிப்பாளர் அனைத்து இலங்கை மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஏப்ரல் 21 தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் இன்று நடைபவனி ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேநேரம், காலை 8.45 அளவில் நாடளாவிய ரீதியாக உள்ள சகல வழிபாட்டு ஸ்தலங்களிலும்மணி ஓசை எழுப்பப்படவுள்ளதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.