நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 22/04/2025 | Edited on 22/04/2025

சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாறு ‘புலே’ எனும் தலைப்பில் இந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிராவ் புலேவாக பிரதிக் காந்தி நடித்துள்ளார். ஜோதிராவ் புலே மனைவியான சாவித்ரிபாய் புலேவாக பத்ரலேகா நடித்துள்ளார். இப்படத்தை டான்சிங் சிவா பிலிம்ஸ் மற்றும் கிங்ஸ்மென் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்க ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தை ஆனந்த் நாராயன் மகாதேவன் இயக்கியுள்ளார். இவர் நடிகரும் கூட. தமிழில் ரிதம், பாபநாசம், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

‘புலே’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் தங்களை தவறாக சித்தரித்துள்ளதாக பிராமண சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தணிக்கை குழு வாரியம் படத்தில் இருந்து சாதி பெயர்களை நீக்க கோரியது. மேலும் ட்ரைலரில் இடம் பெற்ற சர்ச்சையான காட்சிகளையும் நீக்க கோரி ‘யு’ சான்றிதழ் வழங்கியது. இதற்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தேசியவாத காங்கிரஸ் கட்சி மஹாராஷ்டிரா மாநில தலைவர் ஜெயந்த் பட்டில் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Advertisement

இப்படம் ஜோதி ராவ் புலேவின் 198வது பிறந்தநாளான கடந்த 11ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. இதனால் பிரமாண சமூக எதிர்ப்பால் படம் தள்ளிப்போனதா இல்லை சென்சார் போர்டு விஷயங்களால் தள்ளிப் போனதா என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயன் மகாதேவன், பிராமண சமூக எதிர்ப்பால் தான் படம் தள்ளிப் போனது என சமீபத்தில் விளக்கமளித்திருந்தார். 

இந்த விவகாரம் குறித்து பேசிய பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப், “இந்த நாட்டில் சாதிவெறி இல்லையென்றால், புலேவும் அவரது மனவியும் ஏன் போராடினார்கள்? தணிக்கைக்கு ஒரு படம் சென்று அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் ஒரு குழுக்களும் பிரிவுகளும் எப்படி ஒரு படத்தை அணுக முடிகிறது. இங்கு முழு சிஸ்டமுமே தவறாக உள்ளது” எனக் கொந்தளித்து பிராமண சமூகத்துக்கு எதிராக கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சைய கிளப்ப பின்பு மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் அனுராக் கஷ்யப் மீண்டும் மன்னிப்பு கோரி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கோவத்தில் ஒருவருக்கு பதிலளிக்கும் போது எல்லாவற்றையும் மறந்து விட்டேன். அதில் முழு பிராமண சமூகத்தையும் இழிவாக பேசிவிட்டேன். அந்த சமூகத்தில் இருந்து பல மனிதர்கள் என் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். பெரும் பங்கை அளிக்கிறார்கள். இன்று அவர்கள் என்னால் காயப்படுகிறார்கள். என் குடும்ப உறுப்பினர்களும் காயப்படுகிறார்கள். 

Advertisement

நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் நான் பேசிய விதத்தாலும் காயப்படுகிறார்கள். இப்படி பேசியதன் மூலம் நானே இந்த பிரச்சனையில் இருந்து என் கருத்தை திசை திருப்பி விட்டேன். அதனால் இந்த சமூகத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல், இது மீண்டும் நடக்காதபடி பார்த்துக் கொள்கிறேன். என் கோபத்தை சரி செய்ய முயற்சிக்கிறேன். இனிமேல் ஒரு பிரச்சனையை வெளிகொண்டு வரும்போது சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றுள்ளார். 


<!–
–>

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

–>

Advertisement