விளையாட்டு

2010 போல… வரலாறு மீண்டும் திரும்பும்: சி.எஸ்.கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேச்சு

Published

on

2010 போல… வரலாறு மீண்டும் திரும்பும்: சி.எஸ்.கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேச்சு

18-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி-20 தொடர் இந்திய மண்ணில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தத் தொடரில் களமாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்க ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது. ஆனால், அதன்பிறகு நடந்த 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்தது. இந்த இக்கட்டான சூழலில், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு  தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து, சி.எஸ்.கே அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்த தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற பிறகும், சி.எஸ்.கே அணி தோல்வியடைந்தது.  ஆனால், லக்னோவில் நடந்த ஆட்டத்தில் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் திருப்பு முனையைப் பெற்றது  சி.எஸ்.கே. எனினும், இந்த வெற்றி வேட்டையை தொடர்ந்து நடத்திட முடியாமல், அடுத்த போட்டியில் மும்பையிடம் வீழ்ந்தது. தற்போது, சி.எஸ்.கே அணி 8 போட்டிகளில் ஆடி 6-ல் தோல்வி, 2-ல் மட்டும் வெற்றி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி  இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிப் பெற்றால் கூட பிளே ஆஃப்க்கு செல்ல முடியாது. அதனால், ஆறுதல் வெற்றிகளுடன் முடிக்க முயன்று வருகிறது. நம்பிக்கை இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய சிஎஸ்கே அணி, பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியதைப் போல, இந்த ஆண்டும் வெல்லும் என்று சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) காசி விஸ்வநாதன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் பேசிய காசி விஸ்வநாதன், “இந்த தொடரில் சி.எஸ்.கே அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். அது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கலாம். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். 2010 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை. அதேபோன்று, இந்த ஆண்டும் வெல்லும் என நம்பிக்கை உள்ளது” என்று  அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version