விளையாட்டு
ஆன்லைன் செயலி மூலம் ஐ.பி.எல் சூதாட்டம்: 2 பேரை வளைத்த கோவை போலீஸ்
ஆன்லைன் செயலி மூலம் ஐ.பி.எல் சூதாட்டம்: 2 பேரை வளைத்த கோவை போலீஸ்
கோவையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி மாநிலம் மற்றும் மாவட்டம் முழுவதும், சூதாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சூதாட்டத்தில் ஏழு பேர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து பணம், நான்கு சக்கர வாகனம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செல்வபுரம் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் செல்வபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ஆன்லைன் செயலிகள் மூலம் அதேப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பாலகிருஷ்ணர் இருவரும் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் ஆன்லைனில் உள்ள செயலிகளை பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, ஒரு பந்துக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து வேறு யாரேனும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.