இந்தியா
காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3 நாட்களே ஆன கடற்படை அதிகாரி பலி: மனைவி கதறல்
காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3 நாட்களே ஆன கடற்படை அதிகாரி பலி: மனைவி கதறல்
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த புதிதாக திருமணமான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நார்வால் (26) ஒருவர்.வினய் நார்வாலுக்கும் ஹிமான்ஷி என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் தேனிலவுக்காக பஹல்காம் சென்றிருந்தனர். நேற்று பைசாரன் என்ற பிரபலமான சுற்றுலாத் தலத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் வினய் நார்வால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த கொடூர சம்பவம் குறித்து ஹிமான்ஷி கூறுகையில், “நான் என் கணவருடன் பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவன், என் கணவர் முஸ்லிமா என்று கேட்டான். அவர் இல்லை என்று கூறியதும், அந்த நபர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டான்” என்று கண்ணீருடன் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.வினய் நார்வாலின் தந்தை, சகோதரி மற்றும் மாமனார் ஆகியோர் நேற்று மாலையே பஹல்காமுக்கு புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை அவரது உடல் கர்னாலில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது.இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அவர், “இந்த துயரமான நேரத்தில் அரசு துணை நிற்கும்” என்று கூறினார். கர்னால் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் ஆனந்த் மற்றும் அசாந்த் சட்டமன்ற உறுப்பினர் யோகேந்தர் சிங் ராணா ஆகியோர் வினய் நர்வாலின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லெப்டினன்ட் வினய் நர்வால் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த செய்தி கேட்டு கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் அனைத்து கடற்படை வீரர்களும் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு எங்களது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கொடிய வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த மற்ற அனைவருக்கும் இந்திய கடற்படை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.வினய் நார்வாலின் பக்கத்து வீட்டுக்காரர் சீமா சர்மா கூறுகையில், “வினய்க்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. பத்து நாட்களாக கொண்டாட்டங்கள் நடந்தன. அவர் மிகவும் நல்ல பையன். நான் அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறேன். அவர் பொறியியல் முடித்துவிட்டு, பின்னர் கடற்படை தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் நிலை அதிகாரியானார். அவர்கள் முதலில் சுவிட்சர்லாந்தில் தேனிலவு கொண்டாட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அவருக்கு விடுப்பு கிடைக்காததால் காஷ்மீருக்கு சென்றார்கள். எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. யாரோ கண் வைத்துவிட்டார்கள் போல. நேற்று இரவுதான் எங்களுக்கு இந்த செய்தி கிடைத்தது. அவரது குடும்பத்தினர் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அவரது இரட்டை சகோதரியும், தந்தையும் அவரை அழைத்து வர சென்றுள்ளனர்” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “ஒரு பெண் கதறி அழுது, தன்னை கூட கொன்று விடும்படி பயங்கரவாதிகளிடம் கெஞ்சும் வீடியோக்களை நாங்கள் பார்த்தோம். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை விட்டுவிட்டு, நடந்ததை மோடியிடம் போய் சொல்லும்படி கூறினார்களாம்” என்று வேதனையுடன் தெரிவித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.Read in English: Newly married Indian Navy officer among those killed in Pahalgam terror attack: ‘I was eating bhel puri with my husband’