இலங்கை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஈ.சரவணபவன் கொள்கை ரீதியில் ஆதரவு

Published

on

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஈ.சரவணபவன் கொள்கை ரீதியில் ஆதரவு

உள்ளூராட்சித் தேர்தலில், தனது முழுமையான ஆதரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பாதையில் பயணிப்பதற்கு, மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நான் அரசியல் செயற்பாடுகளில் இருந்து சற்று விலகியிருந்தேன். பலரும் என்னை அணுகினார்கள். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே எனது ஆதரவை வழங்கியுள்ளேன். 

தமிழ்த் தேசியத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் கொண்டுசெல்கின்ற ஒரு தரப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே ஆகும். எனவேதான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை நான் வரித்துக்கொண்டேன்.

கட்சிக்காக உழைத்தவர்களையும், அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களையும் அவர்கள் விலக்கிவைத்தனர். ஒரு தனிநபரின் நிகழ்த்தி நிரலுக்கு அமையவே செயற்பட்டனர். கிடைக்கக்கூடிய உச்சபட்ச வாக்குகளைக் கருத்திற்கொள்ளாமல் தன்னிச்சையாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Advertisement

தமிழரசின் தலைமைத் தெரிவின்போது, பலரால் மாற்றுத் தெரிவாக ஆதரிக்கப்பட்டவரும், தம்மை ஆதரித்தவர்களுக்காக களத்தில் இறங்கித் துணிவாகக் குரல்கொடுக்கவில்லை. மூத்த உறுப்பினர்களைக் கட்சியில் வைத்திருக்கவும், மதிக்கவும் தமிழரசுக் கட்சி தவறிவிட்டது. கட்சிக்காக நாங்கள் தொகுதிகளில் செலுத்திய உழைப்புகள் அனைத்தும் அர்த்தம் இல்லாமலாக்கப்பட்டன.

நிலையான தமிழ் தேசியம், இளைஞர்களுக்கான அரசியல் என அனைத்து விடயங்களும் கஜேந்திரகுமார் அணியில் உள்ளது. தமிழர்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வரவேண்டும் என அவர் முயற்சிகளை எடுத்துள்ளார். கட்சி வளர்வது, கட்சியை வளர்ப்பது என்பதற்கு அப்பால் மக்களின் காலத்தேவை கருதி நாங்கள் செயற்பட வேண்டும். அதுவே சரியான தலைமைத்துவத்தின் மாண்பு. ஆதலால், தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிக்கும் முன்னணியை நாம் பலப்படுத்துவோம்.

பிரிவினைகளைக் கடந்து நாங்கள் ஒன்றிணையாவிட்டால், கொழும்பில் இருந்து வரும் கட்சிகள் கால்பதிக்கும் ஆபத்து நேரும். ஏற்கனவே அந்த ஆபத்து எமக்கு அருகாக வந்துள்ளது. நாம் இன்னுமின்னும் அந்த ஆபத்துக்கு ஆட்படக்கூடாது.

Advertisement

வடக்கு, கிழக்கு என எம்மைப் பிரித்தவர்கள் ஜே.வி.பி. இதை நான் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றேன். எதிர்கால இருப்பை பலப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழ்த் தேசியக் கட்சிகளை நாங்கள் தெரிவுசெய்ய வேண்டும். அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிறந்த தெரிவாக அமையும் – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version