இந்தியா
பஹல்காம் தாக்குதலில் தலையில் குண்டடி பட்டு உயிரிழந்த ஒடிசா இளைஞர்: விடுமுறையில் சுற்றுலா சென்றிருந்தபோது சோகம்!
பஹல்காம் தாக்குதலில் தலையில் குண்டடி பட்டு உயிரிழந்த ஒடிசா இளைஞர்: விடுமுறையில் சுற்றுலா சென்றிருந்தபோது சோகம்!
காஷ்மீரின் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றிருந்த ஒடிசா மாநில பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றிய பிரசாந்த் சத்பதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலையில் குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆண்கள் ஆவர். அவர்களுடன் சுற்றுலா சென்றிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை பயங்கரவாதிகள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார். ரெமுனாவைச் சேர்ந்த பிரசாந்த் சத்பதி (43) தனது மனைவி பிரியதர்ஷினி மற்றும் 9 வயது மகனுடன் ஏப்.19-ம் தேதி விடுமுறைக்கு காஷ்மீர் சென்றிருந்தார். ஒடிசா புவனேஸ்வரிலுள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) பிரசாந்த் சத்பதி கணக்காளராக பணியாற்றினார்.அவரது மனைவி பிரியதர்ஷினி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, தனது கணவர் ரோப்வேயில் இருந்து இறங்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தலையில் புல்லட் சுடப்பட்டன. அவர் நிலைகுலைந்து விழுந்தபோது என்ன நடந்தது என்றே எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருநிமிடம் இதயம் நின்றுவிட்டது என்று கண்ணீர்மல்க கூறினார்.இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் உடல் எந்த பிரச்னை இல்லாமல் சொந்த ஊர் வருவதை உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள மாநில குடியிருப்பு ஆணையருக்கு உத்தரவிட்டார்.ஜம்மு-காஷ்மீரில் 3 தசாப்தங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் ஆகும். பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 2 வெளிநாட்டினர் உட்பட 28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பஹல்காமில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள பைசரண் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது. 4 துப்பாக்கி ஏந்திய நபர்கள் வந்து சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு விரைந்து நிலைமையைப் பற்றி அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்துள்ளார்.